அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி
Opinion

அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

Jul 10, 2025


வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது நடவடிக்கை பார்ப்பனர்கள், உயர் சாதி என்று கருதி கொள்ளும் பார்ப்பன அடிமைகள், காங்கிரசு – ஆகியோரின் எதிர்ப்பையும் சந்தித்தது. பெரியார் காங்கிரஸில் நிறுத்தப்படுத்தும் இந்த சட்டத்தை பிரித்தும் வரவேற்று மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, 1927-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டு, கோயில் சொத்துக்களை முறையாக பதிவு செய்யும் பணியை அரசு நேரடியாக எடுத்துக்கொண்டது.

பிறகு, சமூக நீதியின் வழிகாட்டியாக பெரியாரின் பாதைபின்பற்றிய காமராசர் தலைமையிலான அரசு, 1954ஆம் ஆண்டு அறநிலையத்துறை தொடர்பான பல நடைமுறைகளை மேலும் தெளிவாக்கி, நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அவரது ஆட்சியில் கோயில்கள் சார்ந்த நிதிகள் பொது நல நோக்கங்களுக்கே செலவிடப்பட வேண்டும் என்ற கொள்கை வலுப்பெற்றது.

1971-ல் முதன்முறையாக, கலைஞர் தலைமையில், அறநிலையத்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டது. இது வெறும் நிர்வாக மாற்றம் அல்ல; கோயில்களின் வருமானம் அரசுப் பள்ளிகள், குழந்தைகளுக்கான கருணை இல்லங்கள், பிச்சைக்காரர்களுக்கான மறுசீரமைப்புக் கூடங்கள் போன்ற பொது நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறான திராவிட சமூகநீதிக் கொள்கையின் பயனாகவே, இன்று இந்து அறநிலையத்துறை அனேக கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. அரசு இணையதளமான hrce.tn.gov.in இல், இந்து அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்படும் கல்வி நிறுவனங்களின் முழுமையான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்களும் உள்ளன. அதாவது, கோயில்களின் வருமானம் சமூக நலத்துக்கும் கல்விக்காகவும் பயன்படுத்தப்படுவது என்பது நீண்டகால நடைமுறையாகவே உள்ளது – அதுவும் அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக.

ஆனால், தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, சமூகநீதியின் அடையாளமாக உள்ள இந்து அறநிலையத்துறை வருமானத்தை கல்விக்காக பயன்படுத்துவது தவறு எனக் கூறுகிறார்.

இது வெறும் அரசியல் வெறுப்போ, தேர்தல் பாணி வாதமோ அல்ல; கோயில்களின் பணம் பார்ப்பனர்களுக்கே மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஒரு பாசிச நம்பிக்கையின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பார்ப்பன பிழைப்புக்காக சொல்லப்பட்ட பழமொழியை தவிர்க்க முடியாத வகையில் ஓசையாகக் கூறியதும், மக்களின் நனவுகளை மதவாதத் தன்மையில் இழுக்க விரும்பும் நோக்கத்தையே காட்டுகிறது.

முற்போக்கு அரசியலை வலியுறுத்தும் நீதிக்கட்சி மூலமும், பெரியாரியத்தையும், அண்ணவையும், சமூகநீதியையும் ஏற்றுக்கொண்ட அனைத்து அரசுகளும், கோயில்களின் பணத்தை பகுப்பாய்வு செய்து சமூகத்திற்கு திருப்பியது. இந்த நியாயமான, வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை பாஜக உடன் கூட்டணி அமைத்த உடன் எதிர்க்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த வரலாற்றையும், எந்த சமூக நீதிக்கடமையையும் மதிக்கவில்லை என்பதே தெளிவாகிறது.

நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *