
அஜித் குமார் மரணமும் மேல் அதிகார அழுத்தமும்! காவல் ஊழியர்களுக்கு சங்கம் வேண்டும் ஏன் ?
இஸ்ரேல் ராணுவ நுண்ணறிவு பிரிவில் “சாத்தானின் வழக்கறிஞர்” அல்லது “பத்தாவது மனிதன் விதி” எனப்படும் ஆய்வு முறை உள்ளது. பதற்றமான சூழ்நிலையில் எல்லோரும் ஒரே சிந்தனையில் செயல்படும் போது, ஒன்று மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தப் பார்வையை இப்போது நாம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது.
சகோதரர் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்தது (3rd degree எனப்படும்) கொடூரமான போலீஸ் அராஜகத்தின் விளைவு. இது சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆறு கடைநிலை காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட கடைநிலை காவலர்களின் குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இது ஏற்கத்தக்கது அல்ல என்றாலும், அவர்களில் ஒரு பெண் கூறிய “உயர் அதிகாரிகள் சொல்லித்தானே இதை செய்தார்கள்” என்ற வார்த்தைகள் சமூகத்தில் கவனிக்கப்படாமல் விட்டுவிடப்படுகின்றன.
இந்நிலையில் பத்தாவது மனிதனாக நான் கேலி செய்யாமல், கிண்டல் பேசாமல், அந்த பெண் கூறியவற்றை சிந்திக்கிறேன். இதே நேரத்தில், நேற்று சென்னை போலீசாரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியும் வெளியாகியுள்ளது.
இவை அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது, கடைநிலை காவலர்களின் மன அழுத்தமும், மேல் அதிகாரிகளின் அழுத்தமும், அவர்கள் அடிமைப் போன்று நடத்தப்படும் சூழலும் பளிச்சென்று தெரிகின்றன. 2011 முதல் தமிழகத்தில் போலீசாரின் தற்கொலை அதிகரித்து வருவது ஒரு தனி சம்பவமாக அல்ல; அமைப்புசார் வன்முறையின் விளைவாகும். துரதிருஷ்டவசமாக, சுயமரியாதை, சமத்துவம் பேசப்படும் தமிழகமே இத்தகைய தற்கொலைக் கோரங்களை அதிகம் சந்தித்து வருகிறது என்பதை 2018 ஆம் ஆண்டு The New Indian Express செய்தி கூறுகிறது.
கடைநிலை காவலர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றதும், ஓய்வு அற்றதும், மனித உரிமை மறந்ததுமானது. “மேலதிகாரி சொன்னால் அது சட்டம்” என்பதுபோல் ஒரு உச்சபட்ச நெருக்கடி சூழ்நிலையில் அவர்கள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். நீண்ட வேலை நேரம், ஓய்வில்லாத பணியிடம், மேலதிகாரிகளின் மிரட்டல்கள் ஆகியவை ஒரு போலீசை வன்முறைக்குத் தள்ளி, பின்னர் அதற்கே விலையாக மாட்டும் சூழ்நிலையை உருவாக்குகின்றன.
இந்தச் சூழலில் மனிதம் சிதைந்து விடுகிறது. இதை மாற்ற, ஒரு சுயாதீன காவல் சங்கம் கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த சங்கம், மேலதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல், கடைநிலை காவலர்களின் உரிமைகளை பேசும் அமைப்பாக இருக்க வேண்டும். மனநல ஆலோசனைகள், குறை கூறும் அமைப்புகள், ஒழுங்குமுறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். சுழற்சி முறையில் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு பணிகளிலும் பந்தோபோஸ்ட் பணிகளிலும், உணவு, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
பெண் காவலர்களுக்கு மாதவிடாய், கர்ப்ப காலம், குழந்தை பராமரிப்பு காலங்களில் தகுந்த விடுப்பும், மருத்துவ பரிசோதனையும், மனநல பராமரிப்பும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.
இது அஜித் குமார் வழக்கில் நீதி நிலைநாட்டுவதை மட்டுமல்ல; காவல்துறையில் குரல் அற்ற கிடைமட்ட ஊழியர்களுக்கான குரலாகவும் அமையும், எதிர்காலத்தில் இது போன்ற மரணங்கள் நடப்பதையும் தடுக்கும்.
அஜித் குமார் வழக்கில், மேலதிகாரிகள் கட்டாயப்படுத்தியதால் தான் இந்த கொடுமை நடைபெற்றது. ஆனால் கைது செய்யப்பட்டு இருப்பவர்கள் கடைநிலை காவலர்கள் மட்டுமே. உண்மையில், ஒரு சங்கம் இருந்திருக்குமேயானால், அந்த போலீசார் தங்களை மிரட்டும் அதிகாரியிடம், “உத்தியோகபூர்வ உத்தரவை எழுதிக் கொடுங்கள்” என்று கூறி அந்தச் செயலைத் தவிர்க்க வாய்ப்பிருக்கும்.
இனிமேல் காவல் நிலையங்களில் லாக்கப் மரணம், போலீசாரின் தற்கொலை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறைக்குள் உடனடியாக சுயாதீன சங்கம் ஏற்படுத்த வேண்டும். இதை மேற்கொள்ள, அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்
அரசியல் செய்திகள்