Tamilnadu

துணைவேந்தர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற மனு தாக்கல் செய்த தமிழக அரசு

May 21, 2025

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டங்களை எதிர்த்த வழக்கை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் சட்டங்களை எதிர்த்த வழக்கில் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் தாக்கல் செய்த மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த பா.ஜ. மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் வெங்கடாச்சலபதி அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த தகவலை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்மொழி அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் ஒப்புதல் வழங்காத சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் கே.வெங்கடாஜலபதி எந்த பொதுநலனும் இல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், மனுதாரர் திருநெல்வேலி பாஜக மாவட்ட செயலாளராக இருந்தவர் தற்போது பாஜக வழக்கறிஞராக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஒன்பது சட்டங்களை எதிர்த்து விடுமுறை காலத்தில் மனுத்தாக்கல் செய்ய அவசியமில்லை எனவும், கடந்த மாதம் 11 ஆம் தேதி சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் 30 ஆம் தேதி வரை வழக்கு தொடராமல் தற்போது விடுமுறை கால நீதிமன்றத்தில் தொடர்ந்தது ஏன்? ஏன் இந்த அவசரம் என்பது குறித்து மனுதாரர் மனுவில் எதையும் குறிப்பிடாதது ஏன்?.

ஒன்பது சட்டங்களை எதிர்த்து ஒரே வழக்காக எப்படி தாக்கல் செய்ய முடியும்? உரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்தாமல் ஒரே மனுவில் பல நிவாரணங்களை எப்படி கேட்க முடியும். ஒன்பது சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் பல்கலைக்கழகங்களை எதிர்மனுதாரர்களாக ஏன் சேர்க்கவில்லை?. பதில்மனு தாக்கல் செய்ய உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மாற்றக் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமரும் முன்பு ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பிஎஸ் ராமன் இந்த வழக்கு குறித்து முறையீடு ஒன்றை மேற்கொண்டார்.

அப்போது, தமிழக அரசின் உயர் கல்வித் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சனும் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி, உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை நான்கு மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *