சென்னை: மத்திய அரசாங்கம் இந்திய ஆயுதப் படைகளுக்கு புதிய அவசர கொள்முதல் (EP) அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதாவது emergency procurement (EP) எனப்படும் அவசரகால கொள்முதல் அதிகாரத்தை அளித்துள்ளது. ரூ.40,000 கோடி வரை அவசரமாக எந்த விதமான ராணுவ உபகரணத்தையும் இந்திய ஆயுதப் படைகள் இனி வாங்க முடியும்
இதற்கு அமைச்சரவை ஒப்புதல், டெண்டர் விடுவது, விற்பனையாளர் தேர்வு செய்வது, ஆலோசனை செய்வது எல்லாம் தேவை இல்லை. அவசரத்திற்கு வாங்க முடிவு எடுக்கப்பட்டால், பிரபல நிறுவனங்கள் வழியாக அவசரமாக முக்கிய ராணுவ உபகரணங்கள் வாங்கப்படும்.
இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு இந்த அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்தங்கள் 40 நாட்களுக்குள் இறுதி செய்யப்பட வேண்டும், விநியோகங்கள் ஒரு வருடத்தில் முடிக்கப்பட வேண்டும் என்று இந்த முடிவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உயர்த்தப்படும் பட்ஜெட்:
அமெரிக்கா, ரஷ்யா போல இந்தியா தனது பாதுகாப்பு துறைக்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்ய உள்ளது. இதுவரை இந்தியா தனது ஜிடிபியில் 2% மட்டுமே பாதுகாப்பு துறைக்கு செலவு செய்தது. இனி கூடுதலாக இந்தியா பாதுகாப்பு துறைக்கு செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய அரசு புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது, தீவிரவாதத்திற்கு எதிரான நமது போர் புதிய அத்தியாயத்தை அடைந்து உள்ளது. இதுதான் இனி “நியூ நார்மல்” என்று பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டு இருந்தார்.
பாகிஸ்தானில் இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியபோது,பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் தைரியமும் நடுங்கியது. பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத தளங்கள் உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 9/11 மற்றும் இந்தியாவில் நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட உலகில் நடந்த அனைத்து பெரிய பயங்கரவாத தாக்குதல்களும் இந்த பயங்கரவாத தளங்களுடன் தொடர்புடையவை.
நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது. நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. அந்த தாக்குதல் என்னை தனிப்பட்ட வகையில் உலுக்கியது. என்னை கவலையில் தப்பியது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு பட்ஜெட்டில் ரூ.50,000 கோடி அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் துணை பட்ஜெட் மூலம் இந்த கூடுதல் தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒதுக்கீடு ரூ.7 லட்சம் கோடியை தாண்டும் என்று கூறப்பட்டு உள்ளது
கடந்த பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025/26 பட்ஜெட்டில், ஆயுதப்படைகளுக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஒதுக்கீடு ஏற்கனவே 2024/25 ஆம் ஆண்டில் ரூ.6.22 லட்சம் கோடியாக இருந்ததை விட 9.2 சதவீதம் அதிகமாகும்.
இப்போது அதிகரிக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு அடுத்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான ஒப்புதல் கோரப்படும் . ஆராய்ச்சி, மேம்பாட்டிற்கு, ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற தேவையான உபகரணங்களை வாங்குவதற்கும் இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
தற்போதைய ஒதுக்கீடு மொத்த பட்ஜெட்டில் 13 சதவீதமாகும். ஆனால் மொத்த ஜிடிபி 1.9 சதவிகிதம் மட்டுமே. பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் பிரம்மோஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஏவுகணைகள், ஏவுகணை மறிப்பான்கள், டிரோன்கள் உள்ளிட்ட பல போர் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
இதற்கான செலவுகளை கட்டுப்படுத்த, கூடுதல் ஆராய்ச்சி, மேம்பாட்டிற்கு, ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு மத்திய அரசு இந்த 50 ஆயிரம் கோடியை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.