சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம் என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அவர் இதை தெரிவித்தார்.
தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது காலை 9.30 மணிக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கேள்வி நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுமா என மதுராந்தகம் சட்டசபை உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார். அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ” அரசு ஊழியர்களின் நலனில் முதல்வர் ஸ்டாலின் அரசு அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.
முடிவெடுக்கலாம்
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி 309 இல் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி
மத்திய அரசில் 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஈடு இல்லை
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்பதால் இந்த திட்டம் வரவற்கப்படுகிறது. இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.
மாநிலங்கள்
ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் அந்த மாநிலங்களில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டம்
இது தொடர்பான அறிவிப்புகள் 2025- 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எந்த அறிவிப்பும் வராதது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிகிறது.
தமிழக அரசு
இப்போது பணியில் இருக்கும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும் 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் உள்ளனர். பழைய திட்டத்தில் 10 ஆண்டுகள் பணிக்கு மத்திய அரசிலும், 30 ஆண்டுகள் பணிக்கு மாநிலத்திலும் 50% சம்பளம் உத்தரவாத ஓய்வூதியமாகக் கிடைக்கிறது.
குடும்ப ஓய்வூதியம்
கமுட்டேஷன், குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கிறது. குறைந்தபட்ச ஓய்வூதியமாக மத்திய அரசில் ரூ.9,000, மாநிலத்தில் ரூ.7,850 கிடைக்கிறது. 80 வயதுக்கு மேல் 100 வயதுவரை கிடைக்கும் கூடுதல் ஓய்வூதியம், ஊதியக் குழு வரும்போது ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவை. புதிய திட்டத்தில் இல்லை.