
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் – காலநிரல்
25-2-2022 அன்று ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு நடத்த இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டினுடைய நாடாளுமன்ற இடங்களை குறைக்கும் வகையில் அமையவுள்ளவுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தியாக இந்த ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி
அதனை தடுக்கும் நோக்கத்துடன் கீழ்கண்ட நடவடிக்கைகள் அதன்பின் எடுக்கப்பட்டுள்ளன.
- மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது, தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 63 கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டது. அதில் 58 கட்சிகள் பங்கெடுத்து மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள கூட்டாது என்றும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்டால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு தற்போதுள்ள 7.2 விழுக்காடு பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்றும் வலியுறுத்தியது. மேலும் தமிழ்நாட்டைப் போன்றே தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட இருக்கும் தென் மாநிலங்களையும் இணைத்து கூட்டு நடவடிக்கை குழு (Joint Action Comitee) அமைத்து இந்தப் போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
- தமிழ் நாட்டின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படை கூட்டுநடவடிக்கை குழுவை அமைக்கும் வகையில் 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் மாநிலத்தலைவர்கள் ஆகியோருக்கு 7-3-2025 அன்று தமிழ்நாடு முதலைமைச்சர் கடிதம் எழுதினார்கள்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில்

‘இந்திய மக்களாட்சி முறையின் அடிப்படை கூட்டாட்சி; ஒரே நாடாக நமது மதிப்புறு ஒற்றுமையைப் போற்றும் அதேவேளையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் உரிமைக் குரலை எழுப்ப உதவிடும் அமைப்பாக உள்ளதின் அடிப்படை; நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம்மைப்போன்ற மாநில அரசுகளின் உரிமையை நிரந்தரமாகக் குறைக்கக்கூடிய அச்சுறுத்தலை இப்போது எதிர்கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்து, “அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நமது கூட்டு நன்மைக்காகவும், வளர்ச்சிக்கான சரியான ஆதாரங்களைப் பெறுவதற்கும், கல்வி, சுகாதாரம் குறித்த முக்கியமான கொள்கைகளில் மாநிலத்தின் பங்களிப்பை அளிப்பதற்கும், நமது பொருளாதார முன்னுரிமைகள் தேசிய அளவில் உரிய கவனம் பெறுவதை உறுதி செய்வதற்கும், நாம் தனித்தனியாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும்” என கூட்டு நடவடிக்கைக்கு அறைகூவல் விடுத்தார்
மேலும் தனது கடிதத்தில்
1. தெற்கில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானம், கர்நாடகம்; கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஒன்றினைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) சேர முறையான ஒப்புதல்.
2. கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் தங்களுடைய மூத்த பிரதிநிதியை நியமித்தல்.
எனும் இரண்டு கோரிக்கைகளையும் 7 மாநில அரசியல் தலைவர்களுக்கு விடுத்தார்.
இந்த கூட்டுச் செயல்பாட்டிற்கான முதல் கட்டமாக வருகிற 22-03-2025 அன்று சென்னையில் தான் ஒரு தொடக்க கூட்டத்தை நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
- நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆதரவு திரட்டுவதற்காக பிஜு ஜனதா தள கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன், தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைவர் பல்லா சீனிவாச ராவ், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமய்யா மற்றும் துணை முதலமைச்சர் சிவகுமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரள எம்.பி. என்.கே. பிரேமச்சந்திரன், தெலங்கானாவின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோருக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.பி-கள் அடங்கி குழுவினர் நேரில் சந்தித்தனர். சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அவர்கள் இசைவு தெரிவித்தார்கள்.
- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
10-3-2025 அன்று நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி அவர்கள் மக்களவையிலும் திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி. சிவா எம்.பி அவர்கள் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்கள்.
தற்போது வரை தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறார்கள்.
12-3-2025 அன்று தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்கிற தலைப்பில் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தியது.
திமுக இளைஞர் அணி சார்பில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தொடர்ந்து பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- மார்ச் 22 ஆம் தேதி கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தலைவர்கள் வரத்தொடங்கியுள்ளனர். மாண்புமிகு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் நேற்றைய தினமே வருகை தந்துள்ளார். அவரை மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் வரவேற்றார்கள்.
தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் மாண்புமிகு பகவத் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்களும் பங்கெடுக்க உள்ளார்கள். காங்கிரஸ், சிபிஎம்,சிரோன்மணி அகாலிதளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பீஜூ ஜனதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கெடுக்க உள்ளார்கள்.