
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (19)
அண்மையில் ஒரு நாள் பெங்களூருவில் ஒரு மாந்தவுரிமைக் கருத்தரங்கில் பேராசிரியர் ஒருவர் தொழிற்சங்க உரிமைகளின் வரலாறு குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் அடிமைகளின் கலகத்திலிருந்து தொடங்கியது என்று கூறி, ரோமாபுரியில் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் அடிமைகள் தொடுத்த போரை எடுத்துக்காட்டினார். பார்வையாளனாக முன்வரிசையில் அமர்ந்திருந்த நான்… கார்ல் மார்க்ஸ் தனக்குப் பிடித்தமான வரலாற்று வீரனாக ஸ்பார்ட்டகசைக் கருதியதையும், முதல் உலகப் போர்க் காலத்தில் ஜெர்மனியில் ரோசா லக்சம்பர்க் தலைமையில் பொதுமைக் கட்சி ஒன்று ’ஸ்பார்ட்டகஸ் கழகம்’ என்ற பெயரில் இயங்கியதையும் எடுத்துச் சொன்னேன்.
ஸ்பார்ட்டகஸ் பற்றி ஒன்றுக்கு மேல் திரைப்படங்கள் வந்துள்ளன. அவரது கதையைச் சொல்லும் சில நூல்களும் வந்துள்ளன. ஸ்பார்ட்டகசின் வாழ்வையும் போராட்டத்தையும் முடிவையும் சில ஓவியர்கள் கலைப் படைப்புகளாக வரைந்தும் உள்ளனர். இவை அனைத்திலும் சற்றே புனைவுகளும் பாட பேதங்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.
நான் கவனப்படுத்த விரும்புவது மார்க்சிய மூலவர்கள் ஸ்பார்ட்டகஸ் பற்றிக் கொண்டிருந்த வரலாற்றுப் பார்வையைத்தான். அதற்கு முன் ஸ்பார்ட்டகஸ் புரிந்த விடுதலைப் போரின் கதையைச் சுருக்கமாகப் பார்த்து வைப்போம்.
பொது ஊழிக்கு முன் (கி.மு.) [BC or BCE] முதலாம் நூற்றாண்டில் ரோமாபுரிக் குடியரசு அதிகாரத்தின் உச்சியில் இருந்தது. மத்திய தரைக் கடல் முழுவதும் அதன் ஆளுகையில் இருந்தது. ரோமாபுரிப் பண்ணைகளில் அடிமை மந்தைகள் கடுமையாக வேலைவாங்கப்பட்டன. இத்தாலியில் மட்டும் 10 முதல் 15 இலட்சம் அடிமைகள் இருந்ததாக ஒரு மதிப்பீடு. இது மக்கள் தொகையில் 30 முதல் 40 விழுக்காடாக அமைந்தது. போரில் வீழ்ந்த பல நாடுகளிலிருந்தும் அடிமைகள் பிடித்து வரப்பட்டார்கள். ரோமானிய ஆண்டைக் குழுக்களிடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவிற்று. குமுக ஏற்றத்தாழ்வும் ஆளும் வகுப்பின் உட்பூசலும் அடிமைகளின் உள்ளக் குமுறலும் நிறைந்த இந்த வரலாற்று அரங்கில்தான் ஸ்பார்ட்டகஸ் எழுந்தார்.
ஸ்பார்ட்டக்கஸ் வாழ்க்கை குறித்து புளோரியஸ், புளூட்டார்க், அப்பியன் ஆகிய எழுத்தாளர்கள் பதிந்திருப்பதிலிருந்தே ஓரளவு அறிய முடிகிறது. அவர் திரேசியராகப் பிறந்தவர். கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் கூட்டம்கூட்டாமாக அடிமைகளை அனுப்பி வைக்கும் பகுதியாக திரேஸ் வட்டாரம் அமைந்திருந்தது. ஸ்பார்ர்ட்டகசைப் பிடித்து ரோமாபுரிக்கு அடிமையாக விற்று விட்டனர். அடிமைகளில் ஒரு பகுதியினரைச் சண்டைக்குப் பழக்கி அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது ஆண்டைகளுக்குக் கேளிக்கையாக இருந்து வந்தது. இந்தச் சண்டைக்காரர்கள் ’கிளேடியேட்டர்கள்’ (வாட்போர் வீரர்கள்) எனப்பட்டனர். அவர்கள் தமக்குள்ளேயோ அல்லது சிங்கம் போன்ற கொடிய வனவிலங்குடனோ சண்டையிட வேண்டும். பெரும்பாலும் ஒருவர் உயிர் போகும் வரை சண்டை நடக்கும், இதற்கான அரங்குகளில் ஆண்டைகள் இந்தச் சண்டைகளைக் கண்டு களிப்பார்கள். அடிமைகளான கிளேடியேட்டர்கள் சிறைக் கொட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டுத் தீனி போட்டு, சண்டைக்குப் பழக்கி வளர்க்கப்பட்டனர். இவ்வாறான கிளேடியேட்டர்களில் ஒருவர்தான் ஸ்பார்ட்டகஸ்.
ஸ்பார்ட்டகஸ் அடிமைச் சிறையிலிருந்து தப்பிச் செல்ல விரும்பினார். பொஊமு 73ஆம் ஆண்டு ஸ்பாட்டகசும் அவரின் அடிமைத் தோழர்கள் கிட்டத்தட்ட 70 பேரும் சமையலறைக் கருவிகளை பயன்படுத்திச் சிறைக் கொட்டிலிலிருந்து தப்பி விட்டனர். இதிலிருந்து ”மூன்றாம் அடிமைப் போர்” தொடங்கியது.
ஸ்பார்ட்டகசும் கிளேடியேட்டர்களும் தப்பிச் சென்ற செய்தி பரவி, மற்ற அடிமைகளும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் திரண்டனர். ஸ்பார்ட்டகஸ் அடிமைகளைப் படையாகத் திரட்டினார். 40,000 முதல் 1,20,000 பேர் வரை அந்தப் படையில் அணிதிரண்டதாக வரலாற்றாசிரியர்களின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. அடிமைகள் அல்லாத ஏழை எளிய பிளெபியன் மக்களும் சேர்ந்து கொண்டனர். பயிற்சி பெற்ற ரோமானிய அரசுப் படையினரால் அடிமைகளின் படையை நசுக்க முடியவில்லை. ஸ்பார்ர்ட்டகசின் விடுதலைப் படை இத்தாலி எங்கும் பரவிச் சென்று பேரூர் சிற்றூர் எங்கும் அடிமைகளை விடுவித்தது. இது ஈராண்டுக் காலம் தொடர்ந்தது.
ஸ்பார்ட்டகசின் இராணுவ உத்திகள் கரந்தடி (கெரிலா) முறைகளைப் போன்றவை. விரைந்து தாக்குதல், பகைவனைத் திகைக்கச் செய்தல், மலைப் பகுதிகளில் உயர்ந்த இடம்பெயர் திறன், மலைப் பாறைகளையும் பெரிய பெரிய மரங்களையும் கூட கருவிகளாக ஆளுதல் இவையெல்லாம் அடிமைகளை விடுதலை வீரர்களாக மாற்றின. ஸ்பார்ட்டகஸ் படத்தில் ஒரு போர்க் களக் காட்சி: அடிமைகள் மலைச் சரிவில் பாறைகளை உருட்டி பகைவனின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவார்கள். பெரிய மரம் ஒன்றைத் தீயிட்டு உருட்டி விடுவார்கள்.
ஸ்பார்ட்டகசின் இறுதி நோக்கம் பற்றி வரலாற்றாசிரியர்களிடையே மாறுபட்ட பார்வைகள் உள்ளன. அவர் ரோமாபுரியைத் தாக்கிக் கைப்பற்ற விரும்பினாரா? இத்தாலியை விட்டுத் தப்பி ஆல்ப்ஸ் மலைத் தொடரைக் கடந்து சென்று பல நாடுகளுக்கும் பரவிச் செல்ல நினைத்தாரா? அடுத்து என்ன என்பதில் அவரது படையினரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியிருக்கக் கூடும்.
முடிவில் ரோமானிய செனட்டரும் தளபதியுமான மார்க்கஸ் லிசினஸ் கிராசஸ் பெரும்படையோடு சென்று இத்தாலியின் கால்விரல் பகுதியில் ரீஜியம் எனுமிடத்தில் ஸ்பார்ட்டகசின் படைகளைச் சுற்றி வளைத்துக் கொண்டான். ஸ்பார்ட்டகஸ் தன் குதிரையைக் கொன்று விட்டுக் காலாட்படையில் ஒரு வீரனாகக் கலந்து சமர் புரிந்து இறுதிக் களத்தில் மாண்டார். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. உயிருடன் பிடிபட்ட 6,000 விடுதலை வீரர்கள் ரோமாபுரி முதல் கப்புவா வரை ஆப்பியன் வழி நெடுகிலும் சிலுவையில் அறையப்பட்டார்கள். ஆண்டைகளின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் அடிமைகளுக்கு என்ன நேரிடும் என்பதற்கு ரோமானிய மேட்டுக்குலம் விடுத்த செய்தியாக அந்தக் கொடுங்காட்சி அமைந்தது.
ஸ்பார்ட்டகஸ் வீரச் சாவடைந்தது எப்படி? அவர் களத்திலே தாக்குண்டு மாண்டாரா? மற்றவர்களோடு சிலுவையில் அறையப்பட்டு மாண்டாரா? என்பது பற்றிய ஊகங்களின் அடிப்படையில் மனந்தொடும் கதைகள் சிலவும் உலவுகின்றன. ஈண்டு அந்தக் கதைகள் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஸ்பார்ட்டகஸ் வரலாற்றுச் சுவடுகளை காலப் பரப்பில் பதிந்த அந்தச் சில வரலாற்றாசிரியர்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்: சல்லஸ்ட், புளுடார்க், அப்பியன்!
1861 பிப்ரவரி 27ஆம் நாள் இலண்டனில் இருந்து கார்ல் மார்க்ஸ் மான்செஸ்டரில் இருந்த பிரெடெரிக் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் சொன்னார்:
“மாலை நேர இளைப்பாறலுக்காக நான் ரோமானிய உள்நாட்டுப் போர்கள் பற்றி அப்பியன் எழுதிய நூலை மூல கிரேக்க உரையிலேயே படித்து வருகிறேன். அவர் பிறப்பினால் எகிப்தியர். இந்த உள்நாட்டுப் போர்களில் பொருண்மிய அடித்தளத்தின் வேர்களைத் தேடிச் செல்கிறார் என்பதால்தானோ என்னவோ, அவருக்கு “ஆன்மா இல்லை” என்பார் ஷ்லோசர். தொன்மைக் கால வரலாறு முழுவதிலும் ஆகச் சிறந்த மாந்தராக ஸ்பார்ட்டகஸ் வெளிப்படுகிறார். மாபெரும் படைத்தளபதி (கரிபால்டி இல்லை), உயர்ந்த பண்பாளர், தொன்மைக்காலப் பாட்டாளி வகுப்பின் உண்மைப் பெயராளர்.”
இறுதிச் சொற்றொடர்தான் முகன்மையானது. ”தொல் பாட்டாளி வர்க்கத்தின் உண்மைப் பிரதிநிதி” என்ற மார்க்சின் வண்ணனையை மனத்தில் கொள்ளுங்கள்! இது மார்க்சுக்கு வெகுமுற்பட்ட — புதுமக்காலப் பாட்டாளி வகுப்பின் தோற்றத்துக்கு வெகுமுற்பட்ட — விடுதலைப் போராளிகள் பற்றிய மார்க்சியப் பார்வை!
இன்னும் சில வரலாற்று மாந்தர்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்!
தொடர்வேன்.
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.