
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (12) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
நாதக சீமானையும் தோழர் பெ.மணியரசனையும் அவர்கள் தரப்பினரையும் இந்த அளவுக்கு மதித்து மறுப்பெழுத வேண்டுமா? என்று சில அன்பர்கள் கேட்கின்றார்கள். ஒருசிலர் அவ்வாறே பின்னூட்டத்திலும் எழுதுகிறார்கள். சீமானைப் பற்றித்தான் தெரிந்து விட்டதே, அவரை மதித்து இவ்வளவு மறுப்பெழுத வேண்டுமா? என்று கேட்கின்றார்கள். அவரை நானோ நீங்களோ நம்பவில்லை என்பது போதாது, அவரை நம்பக்கூடியவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் உண்மையை உணர்த்தி சீமானிடமிருந்து பிரித்தெடுக்க வேண்டும் என்பதுதான் எனக்கு முகன்மையானது.
இரண்டாவதாக இந்த சீமானிச அணுகுமுறை சீமானோடு நிற்பதில்லை. நாதகவுக்கு வெளியிலும் பெரியார் வெறுப்பாளர்கள் கும்பல் கும்பலாய் இருக்கின்றார்கள். பெரியார் பேரைச் சொல்லிக் கொண்டு பெரியார் கொள்கைக்குப் புறம்பாகச் செயல்படுகின்றவர்கள் மீதான வருத்தத்தைப் பெரியார் வெறுப்பாக இவர்கள் மாற்றிக் கொள்கின்றார்கள்.
பெரியாரை முழுமையாகப் பார்த்து இயங்கியல் நோக்கில் மதிப்பிடாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாக உருவியெடுத்த மேற்கோள்களைக் காட்டிக் குற்றப்படுத்துவோரும் உள்ளனர். இப்படிப் பலவாறாக இருக்கும் பெரியார்-குற்றாய்வர்களுக்கு (Periyar-critics) பெரியார் பக்தியைக் கொண்டோ பெரியார் புகழ்மாலையைக் கொண்டோ விடையிறுத்து விட முடியாது.
பெரியாரை சரிவரப் புரிந்து கொள்ளாமலும் புரியச் செய்யாமலும் பெரியாரைக் காத்தல் இயலாது. வரலாற்றுப் பெருமாந்தர் பெரியாரை மீள்வாசிப்பும் மீள்மதிப்பும் செய்வதை அலட்சியம் செய்வது சீமான்களின் சிறுமதியை அடியோடு வீழ்த்த உதவாது.
பெரியார் பேசியதாக சீமான் எடுத்துக்காட்டிய மேற்கோளுக்குத்தான் தோழர் பெ.மணியரசன் சாட்சி சொல்ல மறுத்து விட்டாரே, அவரை நாம் ஏன் மறுதலிக்க வேண்டும்? என்றும் சில அன்பர்கள் கேட்கின்றார்கள். ”நான் படித்த வரை சீமான் சொன்னது போல் பெரியார் பேசியதாக நானறியேன்” என்று பெம சொல்லி இத்தனை நாட்களுக்குப் பின்னும் அவர் சீமான் பேசியதற்குச் சான்று காட்டவும் இல்லை; அது அவதூறுதான் என்பதை ஒப்புக் கொள்ளவும் இல்லை. சரி, மௌனமாகக் கடந்து போகின்றாரா என்றால் அதுவும் இல்லை. பெரியார் மீது அவரும் தன் பங்குக்கு வரிசையாகக் கல்லெறிந்து சீமானுடன் தன் தோழமையை மெய்ப்பித்து வருகின்றார். பெரியார் குறித்துத் தான் கடந்த காலத்தில் பேசியதையும் எழுதியதையும் மறந்தும் மறைத்தும் சீமானுக்கு சப்பை கட்டி வருகின்றார்.
இந்த வரிசையில்தான் பெமவின் பேரியக்கத் தோழர் கதிர்நிலவனும் விவாதத்தை மடைமாற்றும் இழியுத்தியாக சொந்த முறையிலான பண்புக் கொலையில் (character assassination) ஈடுபடுகிறார். இதற்குப் பெமவின் ஆதரவுண்டா என்றறியேன்.
பெரியாரின் “உறவு முறை” கட்டுரையில் சமயோசிதம் என்ற சொல் இடம்பெற்றதைக் காட்டி சீமானின் சப்பைக்கட்டாளர்கள் குதர்க்கம் செய்ய முயன்ற போது அந்தக் கட்டுரையை வெளியிட்டு அதன் மெய்ப்பொருளை நிறுவினேன். இதை நேராக மறுத்து வாதிடும் நேர்மை கதிர்நிலவனுக்கு இல்லை. மாறாக இந்த ஒரு சொல்லைப் பிய்த்தெடுத்துத் தன் பண்புக் கொலைக்குப் பயன்படுத்துகின்றார்.
பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் என் கடந்த கால விளக்கங்களைக் காட்டிக் கதிர்நிலவன் செய்துள்ள குற்றாய்வுக்கு மட்டும் விடையிறுக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
தமிழ்த் தேசியத்தின் டிவி உருத் திருந்த வடிவமே திராவிடம் என்று உருட்டிக் கொண்டிருந்தேனாம்! ஈவெரா ஒருவர்தான் சாகும் வரை தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர் என தொண்டை வலிக்கக் கத்தினேனாம்! என்னைப் பெரியாருக்கு ஒப்புக் கொடுக்கவில்லை, தமிழ்த் தேசியத்துக்குத்தான் ஒப்புக் கொடுத்தேன் என்று வாயில் எச்சில் ஒழுகப் பேசினேனாம்!
இதற்கு மேல் அவர் எழுதுவது எடுத்துக் காட்டப்படும் தரமுடையதன்று!
நான் பெரியாருக்கு என்னை ஒப்புக் கொடுக்கவில்லை என்று சொன்னது உண்மை! பெரியாருக்கு மட்டுமல்ல, அம்பேத்கருக்கும் என்னை ஒப்புக் கொடுக்கவில்லை. மார்க்சுக்கும் ஒப்புக் கொடுக்கவில்லை! இலெனினுக்கும் ஒப்புக் கொடுக்கவில்லை! நான் மார்க்சியனே தவிர மார்க்ஸ்தாசன் அல்லேன்! எனவே எந்தத் தலைவருக்கும் என்னை என்றைக்கும் ஒப்புக் கொடுக்க மாட்டேன். அப்படிச் செய்வது நான் போற்றும் அறிவியல் சிந்தனைக்கு முரணானது.
அடுத்ததாக நான் தமிழ்த் தேசியத்துக்குத்தான் ஒப்புக் கொடுத்துள்ளேன் என்று பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. அப்படிப் பேசியிருந்தால் தவறு. அதற்காக வருந்துகிறேன். தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியத்துக்காகவே அன்று. தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் தமிழ் மக்களின் விடுதலைக்காகத்தான்!
நான் தமிழ்மக்களுக்கு ஒப்புக் கொடுத்தவன் அல்லது தமிழ்ச் சமூகத்துக்கு ஒப்புக் கொடுத்தவன் என்றுதான் எப்போதும் சொல்லி வருகிறேன். இதில் எச்சில் ஒழுகப் பேச வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? கதிர்நிலவனின் சுவையே சுவை!
தந்தை பெரியார்தாம் இறுதிவரை “தமிழ்நாடு தமிழருக்கே!” என்று முழங்கியவர் என்பதில் என்ன பிழை? சீமானின் சகவாச தோசம் உங்களைப் பாடாய்ப்படுத்துகிறது போலும்! பெரியார் எனும் வேழத்தை எலிக்கூண்டுக்குள் பிடித்து விட சீமானாலும் முடியாது! சீமானை ஆடவிட்டுள்ள கோமானாலும் முடியாது!
தமிழ்த் தேசியத்தின் உருத்திரிந்த வடிவமே திராவிடம்! ஆம், அப்படித்தான் சொன்னேன்! அதாவது திராவிடத்தின் உள்ளடக்கம் தமிழ்த் தேசியமே என்று பொருள். ”பெரியாரும் தமிழ்த் தேசியமும்” படியுங்கள்! தோழர் பெமவை மறுத்து நான் எழுதி வெளிவந்துள்ள ”தேசியத்தின் உரையாடல்” குறுநூலையும் படியுங்கள்!
மதுரையில் தமிழ் தமிழர் இயக்கம் சார்பில் குணாவின் ”திராவிடத்தால் வீழ்ந்தோம்” நூலை மறுத்து நடைபெற்ற கருத்தரங்கில் நான் பேசியதை கதிர்நிலவன் மறந்திருக்க மாட்டார் என நம்புகிறேன். என் உரையின் முடிவில் ஒரு முழக்கம் தந்தேன்:
“இந்தியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்! தமிழியத்தால் வெல்வோம்!”
இன்றும் இதே நிலைப்பாடுதான்!
தமிழ்த் தேசியம் என்ற உணர்வியல் ஈராயிரம் ஆண்டு பழமையானது. இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தியத் தேசியத்தின் ஒரு பகுதியாகவும் அதற்கு மாறாகவும் தமிழ்த் தேசியக் கருத்தியல் மலர்ந்தது. அப்படி மலரும் போதிருந்த உருநிலைக் காரணிகளைப் (concrete factors) பொறுத்து அது எடுத்த உருவங்களில் ஒன்றுதான் திராவிடம். தனித் தமிழ் இயக்கம் இன்னொன்று. எல்லைக் காப்பு இயக்கம் இன்னொன்று! திராவிடம் மொழியுணர்வை சமூகநீதியுணர்வுடன் இணைத்தது. தமிழ்த் தேசியம் பெருந்திரள் அளவில் பருவமடைந்தது… திராவிடமாக!
திராவிடம் என்பது வரலாற்று வழியில் மலர்ந்த வழக்குச் சொல்! நிலைபெற்று விட்ட வழக்குச் சொல்லை விளங்கிக் கொண்டு உரியவாறு ஆளப் பழக வேண்டுமே தவிர, குழந்தைக்குப் பெயர் சூட்டுவது போல் புதுப் பெயர் சூட்டிக் கொண்டு திரிய முடியாது!
பெரியார் கொள்கைகளை அல்லது திராவிடக் கருத்தியலைக் குறை கூற வேண்டும் என்றால் குறை கூறிக் கொள்ளுங்கள்! தாராளமாக! அதற்காக சீமானின் அவதூறுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய அவலம் பேரியக்கத் தலைவர்களுக்கு நேரிட்டு விட்டதே!
தொடர்கிறேன்…
தோழர் தியாகு
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்