
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்
[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.]
நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை இழிவுபடுத்திப் பேசிக் கொண்டே இருக்கின்றார்.
சீமான் பேசியதற்கு நான் சான்று தருகிறேன் என்று பாசக அண்ணாமலை வீறாப்பாக அறிவித்து இத்தனை நாளான பிறகும் எவ்விதச் சான்றும் அவரிடமிருந்து வரவில்லை. தன்னால் சான்று தர முடிவில்லை என்று நேர்மையாக ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவிக்கும் நேர்மையும் அவரிடமில்லை. இதற்காக அவர் தன்னைத்தானே கசையால் அடித்துக் கொள்ள வேண்டுமென நாம் கோரவில்லை.
சீமான் கூறியது போல் பெரியார் பேசியதாக நான் படித்த வரை தெரியவில்லை என்று பெ.மணியரசன் செவ்வியளித்துப் பல நாளாயிற்று. ஆனால் இத்தனை நாளும் அவர் பெரியாரைத் தேடித் துழாவி ஒரு சான்று கொண்டுவந்து நிறுத்த வில்லை. சீமானிடமே “நீங்கள் பெரியார் பேசியதாகச் சொன்னீர்களே, அப்படி எங்கே படித்தீர்கள்?” என்று கேட்டு சான்று வாங்கிக் கொடுக்கவும் இல்லை.
தமிழிசையின் theme partner சீமான் தந்தை பெரியாரை அவதூறு செய்வதில் நமக்கு வியப்பில்லை. அன்புத் தம்பி அண்ணாமலையும் அன்புத் தம்பி ரங்கராஜ் பாண்டேயும் பேர்அறிஞர் எச். ராஜாவும் சீமானைத் தூக்கிப் பிடிப்பதிலும் நாம் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் இந்தக் காவிக் கூட்டத்தின் சேர்ந்திசையில் தோழர் பெ, மணியரசனும் சேர்ந்திருப்பதுதான் நம்மைக் கலங்கச் செய்கிறது. தமிழ்த் தேசியத்துக்குக் காவலனாய் இருப்பதை விடவும் சீமானுக்குக் கேடயமாய் இருப்பதே தமிழ் இந்துக் கடமை என்ற நிலைக்குப் போய் விட்டார் போலும்!
சீமான் பிராபகரனுக்கும் பெரியாருக்கும் சண்டை மூட்டி பிரபாகரனின் முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்று பெரியார் மீது கல்வீசி மகிழ்வது போல், பெமவும் சீமானின் முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்று பெரியார் மீது சேறு வீசுகிறாரா? அல்லது சீமானின் பெரியார் வெறுப்புப் புழுதிவீச்சுக்கே பேராசான்தான் ஊதுவிசையா? எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.
இதற்கிடையில் புதிதாக ஒருவர் வாளேந்திக் களத்தில் குதித்துள்ளார். அவர்தான் தோழர் கதிர் நிலவன். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மதுரை மாநகரச் செயலாளர். சீமான் பேசியதற்கு இவர் சான்று ஏதும் கொடுத்துள்ளாரா? அல்லது அவதூறு செய்த சீமானைச் செல்லமாகவாவது கடிந்து கொண்டாரா? எதுவும் இல்லை. கள்ள மௌனத்துடன் கடந்து போகிறார். அடுத்து “சமயோசிதம்” என்ற சொல்லுக்கு நாதக தம்பிகள் சிலர் கொடுத்த விபரீத விளக்கம்! சமயோசிதம் என்ற சொல் இடம்பெற்ற ”உறவு முறை” என்ற குடியரசு இதழ்க் கட்டுரையை அப்படியே வெளியிட்டு அதன் உள்ளடக்கத்தை விளக்கியிருந்தேன். என் விளக்கம் தவறென்றால் யார் வேண்டுமானாலும் எடுத்துக் காட்டலாம். சீமானோ அவருடைய சப்பைக்கட்டுக்காரர்களோ பெ. மணியரசனோ அப்படி எதுவும் செய்தார்களில்லை. உறவு முறையில் இடம்பெற்ற சமயோசிதம் சீமானின் அவதூறுக்கு சான்றாக முடியும் என்று மெய்ப்பித்து விட்டால் நாமும் வேறு வேலை பார்க்கலாம்.
சமயோசிதம் என்ற துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேற முடியாது என்று தெளிவாகி விட்டதால் தோழர் கதிர் நிலவன் இந்த ஒரு சொல்லை வைத்துக் கொண்டு தனிப்பட்ட தாக்குதல் தொடுத்துப் பெரியாரை மட்டுமல்ல, என்னையும் இழிவுபடுத்தும் கேவலமான உத்தியைக் கையாள்கிறார்.
அவர் முகநூலில் இடுகையிட்டிருப்பதை அப்படியே ஈண்டு பகிர்கிறேன்.
ஒருவருக்கொருவர் ” சமயோசித”மாய் உதவிக் கொள்கிறார்கள்!
//தோழர் தியாகு இப்படி கழிசடையாக மாறுவாருன்னு நான் எதிர்பார்க்கல…
தமிழ்த் தேசியத்தின் உருத் திருந்த வடிவமே திராவிடம்முன்னு
உருட்டிக்கிட்டுருந்தாரு.
//ஈ.வெ.ரா. ஒருவர் தான் சாகும் வரை தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவருன்னு தொண்டை வலிக்க கத்துனாரு.
// என்னைப் பெரியாருக்கு ஒப்புக் கொடுக்க வில்லை, தமிழ்த் தேசியத்திற்குதான் ஒப்புக் கொடுத்தேன்னு வாயில் எச்சில் ஒழுகப் பேசினாரு.
// இப்ப என்னடான்னா…..
பெரியாருக்கு ஒப்புக் கொடுத்தா கூட
பரவாயில்லை…
// பெரியார் சொன்ன “சமயோசிதத்திற்கு” தன்னை ஒப்புக் கொடுத்து ஒவ்வொரு நாளா முகநூல்ல முட்டுக் கொடுத்திட்டு வாராரு.
// ஏற்கனவே தமது இரண்டாவது வாழ்க்கையிலே ஒருவர் குறுக்காக வந்த போது, மகளாக தத்தெடுக்கப் போறேன்னு “சமயோசிதமா” பதில் சொன்னாரு.
// அப்பா, அப்பா, என்று அழைத்தவரை திருமணம் செய்யலாமா? என்று கிழ பெரியாரிடம் கேட்ட போது, சட்டென்று இது சட்ட ஏற்பாடுன்னு ” சமயோசிதமாக” சிந்திச்சு சொன்னாரு.
// இரண்டு பேருமே பதில் சொல்வதில் “சமயோசித” வாதிகள் என்பதால்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள்.
- கதிர் நிலவன்
++++++++++++++++++++++++++++++++++++
அன்பர்களே!
இதுதான் தோழர் கதிர் நிலவன் தொடுத்திருக்கும் தரமான தாக்குதல்! தமிழ்த் தேசியப் பேரியக்கத்திடம் இந்தத் தரத்தை நாம் எதிர்பார்க்கவில்லைதான்! தோழர் பெமவின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டுள்ள ஒருவரால் இப்படித் தரங்கெட்ட முறையில் வாதிட முடிகிறது என்றால் காரணம் சீமானின் சகவாச தோசம்தானோ?
அது ஒரு புறமிருக்க, உறவு முறை கட்டுரை பற்றிய என் விளக்கத்தை மறுக்கக் கதிர் நிலவனிடம் சரக்கு இல்லை என்பது தெளிவாகி விட்டது. நான் கழிசடையாகவே இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் என் வாதுரைக்கு அது எப்படி விடையாகும்?
கண்மூடித்தனமான பெரியார் வெறுப்பு (Periyar-phobia) கதிர் நிலவன் பார்வையை மறைக்கிறது. பெரியார் மணியம்மையை மணந்த நாள்: 1949 சூலை 9. ”உறவு முறை” கட்டுரை வெளிவந்தது குடியரசு 02.06.1945 இதழில். நான்காண்டு கழித்து மணியம்மையை மணப்பதற்காக சமயோசிதமாக எழுதி விட்டார் என்று க்திர்நிலவன் சொன்னால் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால் அவர் ஆய்வறிஞர்! என்னைப் போல் கழிசடை அல்லர்!
நான் கழிசடையாக மாறி விட்டேன் என்பதற்கு அவர் காட்டியுள்ள காரணங்களை நான் அலட்சியம் செய்யப் போவதில்லை. இது குறித்தும் அடுத்தடுத்து எழுதுவேன்.
தொடர்கிறேன்…
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்