கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.
Opinion

கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.

Feb 8, 2025

இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவைப் பொறுத்தவரை, விகிதங்கள் 2011-ல் 67.77 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 77.5%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள் ஒரு சிக்கலான கதையை வெளிப்படுத்துகின்றன.

இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் உள்ள கேரளா, 95.49% கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்துடன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. கல்வியை முன்னுரிமையாகக் கொண்டு, கிராமப்புற மக்களை ஈடுபடுத்தி, பாலின உணர்திறன் கொண்ட கொள்கைகளை செயல்படுத்தியதன் மூலம் கேரளா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக, கேரளாவில் அதிகபட்ச எண்ணிக்கையிலான கல்வியறிவற்றவர்களை பள்ளிகள் மற்றும் பிற படிப்பு மையங்களுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டமான “அக்ஷர கேரளா” திட்டம் அடிப்படை கல்வி அறிவை உறுதி செய்ததுடன் பெண்களின் கல்வியறிவையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், கல்வியறிவு விகிதத்தில் கிராமபுற கேரளாவில் பாலின வேறுபாடுகள் மிகக் குறைவாக உள்ளது (ஆண்கள்: 97.7%, பெண்கள்: 93.47%) . இதே போல் திமுக ஆட்சியில் உள்ள தமிழ்நாடு, “அறிவொளி இயக்கம்” மூலம் 79.6% கிராமபுற பெண்கள் கல்வியறிவை அடைந்துள்ளது. இத்திட்டம், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கல்வி கிட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெறும் திட்டங்களை மட்டும் அறிவித்தால் கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்தில் முன்னேற்றம்‌ காண முடியுமா? நிச்சயமாக முடியாது! ஏன்?

கூறுகிறேன்…

இந்திய அரசால் 2019ல் வெளியிடப்பட்ட மொத்த கருவுறுதல் விகிதத் (TFR) தரவுகள் ஒரு சுவாரசியமான கருத்தை தெளிவுபடுத்துகின்றது. அக்கருத்து என்னவென்றால், பெண்களின் கல்வியறிவு விகிதம் அதிகரித்தால், பிறப்பு விகிதம் குறையும். அதாவது, கல்வித் திறன் உயரும் போது, ஒரு பெண்ணுக்கு சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும்.
இதற்கு சான்றாக கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற பாஜக காழுன்ற முடியாத மாநிலங்களை எடுத்துக் கொள்ளலாம். இம்மாநிலங்கள் கிராமப்புற பெண்கள் கல்வியறிவு மற்றும் சராசரி பிறப்பு விகிதம் இடையேயான ஒரு தொடர்பை வெளிப்படுத்துகின்றன. கேரளாவின் கிராமப்புற பிறப்பு விகிதம் 1.5, அதன் 93.47% கிராமப்புற பெண்கள் கல்வியறிவுடன் ஒத்துப்போகிறது. அதேநேரம், பாஜக கூட்டணி ஆழும் பீகாரின் கிராமப்புற பிறப்பு விகிதம் 3.1, அதன் 45.5% கிராமப்புற பெண்கள் கல்வியறிவின்மை உடன் தொடர்புடையது. இந்த தொடர்பு, கல்வியை பெண்கள் மேம்பாட்டுடன் ஒருங்கிணைக்கும் முழுமையான கொள்கைகளின் தேவையை வலியுறுத்துகிறது. திட்டங்களை அறிவித்தல் மட்டும் மாநிலங்களின் வெற்றியை தீர்மானித்து விட‌வில்லை. மேலே குறிப்பிட்டுள்ளது போல கல்வியை பெண்கள் மேம்பாட்டுடன் ஒருங்கிணைக்கும் முழுமையான கொள்கைகளின் தேவைகளையெல்லாம் பூரீத்தி செய்திருப்பதால் தான் கேரளா, தமிழ்நாடு, போன்ற மாநிலங்கள் இன்றைக்கு கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்தில் நல்ல நிலையில் இருக்கின்றன.

மாநில அரசுகளை மட்டுமே பாராட்டுவீர்களா? ஒன்றிய அரசின் திட்டங்கள் மாநிலங்களின் வெற்றிக்கு உதவவில்லையா? என்ற கேள்வி வாசிப்பாளருக்கு எழலாம்.

கூறுகிறேன்…

ஒன்றிய பாஜக அரசு, கிராமப்புற கல்வியறிவு விகிதத்தை அதிகரிப்பதற்காக “ULLAS” மற்றும் “சாக்ஷர் பாரத்” போன்ற திட்டங்களைத் தொடங்கியது பாராட்டுக்குரியது தான். ஆனால், அவற்றின் தாக்கம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே சீரற்றதாக இருப்பது வேடிக்கையான ஒன்று. எடுத்துக்காட்டாக, பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள பீகார், 54.5% கிராமப்புற பெண்கள் கல்வியறிவை மட்டுமே கொண்டுள்ளது. தேசிய அளவிலான கிராமபுற பெண்கள் கல்வியறிவு விகிதத்தில் பிகார் கடைசி இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பிகாரின் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் அவர்கள், கூட்டணி தாவுதலை விட்டுவிட்டு மாநிலத்தின் கல்வி சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்தியிருந்தால், இன்றைக்கு பிகாருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மற்றொரு எடுத்துக்காட்டாக ராஜஸ்தான், கிராமப்புற பெண்கள் கல்வியறிவு 59.9% கொண்டு, பெரும் பாலின வேறுபாட்டை (ஆண்கள்: 74.16%, பெண்கள்: 45.8%) சந்திக்கிறது. இது, கிராமப்புற கல்வி உள்கட்டமைப்பில் மோசமான முதலீட்டை பிரதிபலிக்கிறது .

ஒன்றிய பாஜக அரசின் “டிஜிட்டல் இந்தியா” மற்றும் “பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்” போன்ற திட்டங்கள் இந்தியாவையே தலை கீழாக புரட்டி போட்டு விடும், நம் நாட்டின் பெண்கள் புதிய உயரங்களை எட்டுவதற்கு வழி வகுக்கும் என்றெல்லாம் சங்கிகளால் கருத்துக்கள் பரப்பப்பட்டது. ஆனால் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற பாஜக ஆழும் மாநிலங்களில் கிராமப்புற பெண்கள் கல்வியறிவு 59-62% மட்டுமே உள்ள நிலையில், ஒன்றிய அரசின் திட்டங்கள் எல்லாம் வெற்றுப் பேச்சாகவும், கண் துடைப்புக்காகவும் மட்டுமே உள்ளன. இதற்கு மாறாக, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பண உதவி செய்து, அப்பெண்களின் வாழ்க்கையையும் அந்தஸ்தையும் மேம்படுத்துவதற்காக “கன்யாஸ்ரீ பிரகல்பா” போன்ற சமூக-ஆதரவு திட்டங்களை முன்னெடுத்து, பெண்கள் கல்வியை ஊக்குவித்துள்ளது. இதே போல நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்த திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண்கள் எந்தவொரு சிக்கலுமின்றி கல்விச் செல்வத்தை பெறுவதற்காக புதுமைப்பெண் திட்டத்தைக் கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. பொருளாதார சூழ்நிலை, குழந்தை திருமணங்கள் போன்ற பிரச்சினைகளால் பெண்களுக்கு கல்வி தடைபடுவதை கண்டறிந்த தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் பெண்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் என்பது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டது. இதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதம் சுமார் 80% உள்ளது. இவ்வாறு பாஜகவுக்கு நேர் எதிரான கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, சமூக நீதி பாதையில் அத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் படுகின்றன. ஆனால் பெண்களின் கல்வியறிவு விகிதம் பற்றியெல்லாம் கவலைப்படாத பாஜக, எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கவும், மற்ற கூட்டணியை உடைக்கவும், தன் சொந்த கூட்டணி கட்சிகளையே தந்திரமாக வீழ்த்தி தான் ஆட்சியில் அமரவும், மதக் கலவரங்களை தூண்டிவிட்டு அதில் ஆதாயம் அடையவும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் தவிர்த்து, ஒன்றிய பாஜக அரசின் திட்டங்கள் பாஜக மற்றும் அதன்‌ கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே தோல்வியை கண்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

முதல் காரணம், ஒன்றிய அரசின் திட்டங்கள் பெரும்பாலும் பிராந்திய சிக்கல்களைப் புறக்கணிக்கின்றன, குறிப்பாக மொழிவழி பன்மை மற்றும் கலாச்சார தடைகளை புறக்கணிக்கின்றன. இரண்டாவது காரணம் மிக முக்கியமான ஒன்று, அது என்னவென்றால், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாக தாமதங்கள் மற்றும் இயலாமை. சான்றாக, தன்னார்வலர்களால் செயல்படுத்தப்படும் ULLAS திட்டம் புதுமையானதாக இருந்தாலும், இத்திட்டம் மாநில அரசுகளின் செயல்பாட்டின் மீது அதிகம் சார்ந்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிர்வாக தாமதங்கள் அதிகமாக உள்ளதால், ULLAS போன்ற திட்டங்களை எதிர்பார்த்த வகையில் செயல்படாமல் போகிறது.

ஆகவே, கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க, ஒன்றிய அரசு, கொள்கை செயல்படுத்தலை மாநிலங்களிடம் ஒப்படைத்தல் வேண்டும். அதாவது கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வெற்றிகளைப் பின்பற்றி, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை மாற்றியமைத்தல் வேண்டும். ஆட்சியை கவிழ்த்தல், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துதல் போன்ற கேவலமான தொழில்களை எல்லாம் விட்டுவிட்டு, ஒன்றிய பாஜக அரசு பெண்கள் கல்வியை முன்னுரிமையாக்குதல் வேண்டும், பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள் தங்களின் தலைக்கனத்தை தூக்கி எறிந்துவிட்டு, மற்ற மாநிலங்களின் வெற்றிகரமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசு கல்வியறிவு விகிதத்தை உயர்த்துவதற்காக, சரிவர செயல்படுத்த முடியாத தங்களின்‌ தோல்வி திட்டங்களை தொடங்கியதற்கு பாராட்டு தேடலாம். ஆனால், உண்மையான வெற்றியாளர்கள் பாஜக காழுன்ற முடியாத மாநிலங்கள் தான். பாஜகவின் நேர் எதிரி மாநிலங்கள் தான். ஒன்றிய பாஜக அரசால் எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்பட்ட மாநிலங்கள் தான். ஆம்! கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்க்கு வங்கம் போன்ற மாநிலங்கள், அரசியல் உறுதிப்பாடு மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம் முன்னேற்றத்தை அடைந்துள்ளன. ஒன்றிய அரசின்‌ நிர்வாக தாமதம், திட்டம் செயல்படுத்தலில் இடைவெளிகளை சரி செய்யாத வரை, இந்தியாவின் 100% கல்வியறிவு கனவு சீரற்றதாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *