
திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜகவின் அடுத்த அசைன்மென்ட். இந்து முன்னணியை வைத்து மத வெறியாட்டம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்திருக்கும் தர்காவில் கடந்த மாதம், இஸ்லாமிய குடும்பம் ஒன்று ஆடு ஒன்றை பலியிட காவல்துறை அனுமதி மறுத்த சம்பவம் முதல் தற்போது இந்து முன்னனி திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று கூறிய கருத்து வரை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது. பலியிடுவதற்காக ஆடு மற்றும் சேவல்களை மலைக்கு கொண்டு வர முயன்ற பல நபர்களை இதேபோல் அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தியிருப்பதாக புகார்கள் குவிந்துள்ளன.
ராஜபாளையத்தில் உள்ள மலையடிப்பட்டியைச் சேர்ந்த சையத் அபுதாஹிர் என்பவர் தனது குடும்பத்தினருடன், ஒரு ஆடு, இரண்டு சேவல்களை பாரம்பரிய பலி செலுத்துவதற்காக தர்காவுக்கு வந்துள்ளார். மலையில் சுப்ரமணிய ஸ்வாமி கோவில் அமைந்திருப்பதால், கால்நடைகளை மலை மேல் அழைத்துச் சென்று பலியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று விளக்கி, அந்தக் குடும்பத்தை மலையின் அடிவாரத்தில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்தில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அப்பகுதி முஸ்லிம்கள் மலைப் படியில் திரண்டு சையத் அபுதாஹிர் குடும்பத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறை உதவி கமிஷனர்கள், ஆர்டிஓ ஆகியோர் வந்து சமாதானம் செய்தனர். தர்காவில் விலங்குகளை பலியிடுவது, சமைப்பது மற்றும் உண்பது நீண்ட கால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஆர்டிஓ அவர்கள் முறையான மனுவை சமர்ப்பித்து, அதை முடிவெடுப்பதற்காக அரசாங்கத்திற்கு அனுப்புவதாக உறுதியளித்தார். எவ்வாறாயினும், இந்த தீர்வை நிராகரித்த போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இறுதியில், விலங்குகளை கொண்டு வந்தவர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நீண்ட காலமாக இப்பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகி வருவதாகவும், முருகன் கோவிலில் நடக்கும் விழாக்களில் முஸ்லிம்கள் பங்கேற்பதும்,
தர்காவில் நடக்கும் விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதும் வழக்கமாகவே இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மற்றும் சில இந்துத்துவ இயக்கங்கள் திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. மேலும் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் முஸ்லிம்களை பற்றி இழிவான கருத்துக்களை இந்து முன்னணி பரப்பி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. உண்மையில் இந்த மலை யாருக்கு சொந்தம் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்திருக்கின்றது. இதன் விடையை பெற முதலில் இந்த மலையின் வரலாற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
இந்துக் கடவுளான முருகனின் ஆறு புனிதத் தலங்களில் ஒன்றாக திருப்பரங்குன்றம் முக்கியத்துவம் பெறுகிறது. சுப்ரமணிய ஸ்வாமி கோவிலுடன், மலையில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பாறையில் வெட்டப்பட்ட கோவில்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் மற்றும் பாறை ஓவியங்களும் உள்ளன.
சுல்தான் ஆட்சிக் காலத்தில் திருப்பரங்குன்றம் மலையில் முஸ்லிம்கள் தர்காவைக் கட்டியுள்ளனர்.
குரானில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கந்தர் சுல்கர்னைன், போதிக்கவும், முஸ்லிம் படையெடுப்பாளர்களுக்கு உதவவும், தங்கள் ஆட்சியை நிறுவவும் மதுரைக்கு வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அவர் திருப்பரங்குன்றம் மலையில் ஒரு மசூதியைக் கட்டியதாகவும், தாக்குதலுக்கு உள்ளானபோது அங்கேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, முஸ்லிம்கள் மலையை, ‘சிக்கந்தர் மலை’ என்று குறிப்பிடுகின்றனர். எனவே இந்த மலை இந்துக்களும் முஸ்லிம்களும் பொதுவான இடம் என்று தான் யூகிக்க முடிகிறது. இதை அங்கு வசிக்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் புரிந்து கொண்டு பல வருடங்களாகவே ஒன்றுபட்டு தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த ஒற்றுமை பாஜகவின் கண்களை உறுத்தியது. இதனால் இந்து முன்னணியை முன்நிறுத்தி பாஜக பல பிரிவினைவாத வேலைகளில் ஈடுபட தொடங்கியது. அதில் மிக முக்கியமான அயோக்கிய வேலைகள், தர்காவின் அருகில் கார்த்திகை திபம் ஏற்றக் கோரிய மனு மற்றும் முஸ்லிம்களின் தொழுகைக்கு தடை கேரிய மனு.
முற்காலத்தில், மலையின் மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ள கோபுரத்தில் கார்த்திகை தீபம் சம்பிரதாயமாக ஏற்றப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். பின்னர், இரண்டாம் உலகப் போரின்போது, திருப்பரங்குன்றத்தில் ஆங்கிலேயர்கள் இந்த நடைமுறையைத் தடைசெய்தனர், மேலும் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் அது மீண்டும் தொடங்கப்படவில்லை.
மலை உச்சியில் இந்துக்கள் கார்த்திகை தீபம் ஏற்றி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கொண்டாடும் விதமாக இந்துத்துவ இயக்கங்கள் மலை மேல் ஊர்வலமாக செல்ல முயற்சித்திருக்கின்றனர். அந்த ஊர்வலத்தில் அவர்கள் முஸ்லிம் மக்களை தகாத வார்த்தைகளை சொல்லி கொச்சைப்படுத்தியிருக்கின்றனர்.
மேலும் “முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெள்யேற்றப்பட வேண்டியவர்கள்” போன்ற மத வெறி முழக்கங்களுடனும் ஊர்வலம் சென்றுள்ளனர். கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கிடைத்ததற்கே இவ்வளவு பெரிய மத வெறி கொண்டாட்டம் என்றால், கார்த்திகை அன்று ஒரு பெரிய மதக்கலவரம் வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதனால் சுதாரித்துக் கொண்ட தமிழ்நாடு அரசு, நீதிமன்றம் சொன்ன இடத்தில் விளக்கேற்ற அனுமதிக்காமல்
உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் 150 மீட்டர் உயரமுள்ள ஒரு இடத்தை தீபம் ஏற்ற தேர்வு செய்தது .
பாரம்பரியத்தை மீட்டெடுக்க இந்து முன்னணி ஒவ்வொரு ஆண்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னைக் காரணத்தால் அரசு அனுமதி தர மறுக்கிறது. இது பாஜகவின் முதல் தோல்வி.
இரண்டாவது தோல்வி, திருப்பரங்குன்றத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதையான நெல்லித்தோப்பில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது தங்களுக்கு இடையூறாக இருப்பதால், அந்த இடத்தில் தொழுகை நடத்த தடை விதிக்கக் கோரி ராமலிங்கம் என்பவர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், திருப்பரகுன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையை “சிக்கந்தர் மலை” என்று குறிப்பிட்டு ஜமாத் உறுப்பினர்கள் நிலத்தை ஆக்கிரமித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர் ராமலிங்கம். சாமானிய இந்து ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் எனக் கூறி இந்து முன்னணி போன்ற இந்துத்துவ இயக்கங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அப்பகுதி இந்துக்கள் யாரும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உண்மை என்னவென்று பார்த்தால் மனுதாரர் ராமலிங்கம் என்பவர் அகில பாரத அனுமன் சேனாவின் மாநில அமைப்பு செயலாளர். ஆக, தங்களது மத வெறியால், மதம் பிரிவினைவாதத்தை முன்னெடுத்து, ஒரு பெரிய மதக் கலவரத்தை தூண்டுவதற்காக இந்து முன்னணியால் செய்யப்பட்ட மற்றொரு கீழ்த்தரமான செயல் தான் ராமலிங்கத்தை வைத்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தொழுகைக்கு தடை விதிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் நெல்லித்தோப்பில் தொழுகையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு எதிராக முடிவு செய்தனர். மேலும், 30 நிமிடம் தொழுகையை அனுமதிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் நீதிமன்றம் உறுதியளித்தது.
கார்த்திகை தீபம் விவகாரம் மற்றும் தொழுகைக்கு தடை கோரிய மனு விவகாரம் என இரண்டிலும் பாஜகவின் பிரிவினைவாத அரசியல் தோல்வியுற்ற நிலையில், அவர்கள் கையில் எடுத்த அடுத்த ஆயுதம் தான் “விலங்குகளை பலியிடுவதை தடை செய்” என்ற பிரிவினைவாத முழக்கம். “திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்த்தை மீட்டெடுப்போம்” என்ற முழக்கத்துடன் இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் இன்று போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது. இன்றும் நாளையும் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இருப்பினும் பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர், “முருகன் மலையை மீட்போம்” என திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.