மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்
Tamilnadu

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

Jan 31, 2025

செந்தில் மள்ளர் புத்தகம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவர் மேற்கோள் காட்டும் விடுதலை இதழில் அப்படி எதுவும் இல்லை என்பதை சீமான் ஆதரவாளர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். வேறு நாள் விடுதலை இதழாக இருக்கக் கூடும் என்று சமாளிக்க முற்பட்டுள்ளார்கள். சரி, அந்த விடுதலை இதழை அவர்கள் கண்டுபிடித்துச் சொல்லட்டும். பொறுமையாகக் காத்திருப்போம்.

பெரியார் எழுத்துகளை நாட்டுடைமையாக்கட்டும், காட்டுகிறோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். அப்படியே இருக்கட்டும், அது வரை சீமான் தந்தை பெரியார் மீதான அவதூறை விலக்கிக் கொள்ளட்டும். அவர் பெரியார் சொன்னதாக ஒன்றைச் சொல்கிறார். அவர் மேற்கோள் காட்டும் சொற்களும் செந்தில் மள்ளர் மேற்கோள் காட்டும் சொற்களும் ஒன்றே. பின்னவர் காட்டும் விடுதலையில் அப்படி எதுவும் இல்லை என்பதை அவர்களே ஏற்றுக் கொண்ட பின், வேறு என்ன விடுதலை இதழ் என்பதை அவர்களே கண்டுபிடித்துச் சொல்லாத வரை சீமானும் செந்தில் மள்ளரும் பெரியார் பற்றி அவதூறு செய்துள்ளார்கள் என்பதை ஒப்புக் கொள்வதுதான் அறிவுநாணயம்.

வேறு சிக்கல்களைப் பேசி மடைமாற்றுகின்ற முயற்சிக்கு நாம் பலியாக மறுக்கின்றோம். சீமான் அவதூறு செய்திருப்பதை ஒப்புக் கொண்டு அதற்காக அவரைக் கண்டிக்க முன்வரட்டும். வேறு எதைப் பற்றியும் பேசலாம் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

சீமான் தான் பேசியதற்கு இது வரை சான்றேதும் தரவில்லை. சான்று கேட்டால் கேட்டவர்களே சான்று தர வேண்டும் என்று விதண்டாவாதம் செய்து கொண்டிருக்கிறார். சப்பை கட்டும் அறிஞர்கள் சிலர் “வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அவரால் சான்று தர முடியவில்லை” என்கின்றனர். இதையாவது சீமான் சொல்லட்டுமே! இது சட்டப் படியோ அறத்தின் படியோ செல்லத்தக்க காப்புரை அன்று.

சரி, சீமான் பெரியார் மீது சுமத்திய அவதூறுக்கு அடுத்த சான்று (?) என்னவென்று பார்ப்போம்.

அது தந்தை பெரியார் அவர்கள் குடியரசு இதழில் எழுதிய ஒரு கட்டுரையின் இறுதி வாக்கியம்:

“ஆகவே இவ் விஷயங்களை எடுத்துக் காட்டி ‘மனிதன்

எப்படி நடந்து கொள்வது?’ என்னும் கேள்விக்கு, பொது

அறிவும் ஆராய்ச்சியும் உள்ள மனிதன் என்ன சொல்ல

முடியும்? என்று யோசிக்கும் போது – சமயோசிதம்

என்பதைத் தவிர வேறு வழிகாட்டி இருப்பதாக அறிய

முடியவில்லை என்பதற்காகவே இவ்வுறவு முறை

விஷயத்தை உதாரணமாக எடுத்துக் காட்ட

வேண்டியதாயிற்று.”

இதில் வரும் சமயோசிதம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? தாய், அக்காள் தங்கை, மகள் யாருடனும் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக உடலுறவு கொள்ளலாம் என்பதுதானாம்! முகநூல் வழியாக மட்டுமல்ல, தொலைக் காட்சி விவாதங்களிலும் இடும்பாவனம் கார்த்தி, மருத்துவர் கார்த்திகேயன் போன்ற பொறுப்புள்ள தோழர்களே இந்த ’சமயோசித’ வாதத்தை முன்வைக்கக் கேட்டேன்.

ஆனால் பெரியார் சொல்லும் சமயோசிதத்தின் பொருள் என்ன? குடிஅரசு 02.06.1945 இதழில் ’உறவுமுறை’ என்ற சுருக்கமான கட்டுரையின் இறுதி வாக்கியம்தான் இது. தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் தொகுத்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக்கம் 194-195இல் இந்தக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் எடுத்துப் பாருங்கள்.

பெரியார் கருத்து என்று சீமான் சொல்வதற்கு மேற்சொன்ன கட்டுரைதான் சான்று என்று பொதுவெளியில் சொல்வதற்கு முன் சப்பைகட்டுக் காரர்கள் சீமானைக் கேட்டுக் கொண்டார்களா? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நம்மைப் பொறுத்த வரை பெரியாரின் ’சமயோசிதம்’ என்ன என்பதைப் புரிந்து கொள்ளு முன் உறவு முறையை முழுமையாகப் படித்து விடுவோம்.

தொடர்கிறேன்,

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *