
“வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்: நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றும் நேரம்”
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவுநாள் (29.012025) நெருங்கும் நிலையில், உங்கள் கனிவான பார்வைக்கு தோழமையுடன் இந்த மடலை அனுப்புகிறோம்.
தன்னுடைய ஈடு இணையற்ற உயிர் தியாகத்தாலும், அளவிட இயலாத அறிவாற்றலாலும் உலகெங்கும் தமிழினத்தை தலைநிமிரச் செய்த அந்த மாவீரனின் நினைவு நாளில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழர்களை ஒன்று திரட்டி வீரவணக்கம் செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
இதற்காக அமைக்கப்பட்ட மேற்கண்ட குழுவில் திரைக் கலைஞர் சத்தியராஜ் புலவர் இரத்தினவேலன், மரு.தாயப்பன், செல்வராஜ் முருகையன், மெஸ்மர் காந்தன் வெள்ளையன், வழக்குரைஞர் வடிவாம்பாள், தோழர் டேவிட் பெரியார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை கொளத்தூரில் முத்துக்குமாரின் திருவுடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் தமிழீழ சொந்தங்களுக்காக உயிர் தியாகம் செய்த முதல் நெருப்பு அப்துல் ரவூப், ஈகி முருகதாசன், தோழர் செங்கொடி, காவிரிச்செல்வன் விக்னேஷ் முதலான 27 ஈகியர்கள் நினைவாக 27 அடி உயர தற்காலிக மலர்த்தூண் ஒன்று வீரவணக்க நிகழ்வுக்கென்றே
29.01.2025 புதன்கிழமை காலை 10.07 மணியளவில், முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்த அதே நேரத்தில் அவரது சகோதரி தமிழரசி கருக்குவேல்ராஜன் மலர்த்தூணுக்கு மலர்வணக்கம் செலுத்தி வீரவணக்க நிகழ்வை தொடங்கி வைக்கின்றனர். அவர்களை தொடர்ந்து நீங்களும், உங்களை தொடர்ந்து நாங்களும், அதையடுத்து ஆயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்திகளை ஏந்தி, அந்த தியாகத் திருவிளக்குகளை வணங்க உள்ளோம்.
எவரும் பேசாமல், முழக்கங்கள் இல்லாமல், அந்த வீர தமிழ் மகனின் மரணவாக்கு மூலம் மட்டுமே பின்னணியில் ஒலித்து கொண்டிருக்க, மௌனமலர் நடைபெறும் அஞ்சலியாக இந்த நிகழ்வு என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம். முத்துக்குமார் முதலான 27 மாவீரர்களின் மனசாட்சியோடு நாம் ஒவ்வொருவரும் மனம்விட்டு பேச வாய்ப்பளிக்கும் விதத்தில் கனத்த அமைதியுடன் நாம் வீரவணக்கம் செலுத்த இருக்கின்றோம்.
முத்துக்குமாரின் குடும்பத்தினர் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த இனக்காப்பு ஈகியர்களின் குடும்பத்தினரையும் இந்த நிகழ்வில் பங்கேற்க அழைத்துள்ளோம்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் திருவுடலுக்கு வீரவணக்கம் செலுத்தத் திரண்ட உங்கள் ஒவ்வொருவரையும் இந்த நிகழ்வுக்கு உரிமையுடன் அழைக்க வேண்டியது எங்கள் கடமையாகிறது. அந்த தமிழர் பெருங்கூட்டம் சிந்தாமல், சிதறாமல் அப்படியே இருக்கிறது என்பதை உறுதி செய்வது ஒன்றே இந்த வீரவணக்க நிகழ்வின் நோக்கம். நீங்கள் மட்டுமின்றி உங்கள் அமைப்பு, இயக்கம் கட்சியினரும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று உரிமையுடன் அழைக்கின்றோம்.
இந்த நிகழ்வை பொறுத்தவரை நாங்கள் வெறும் நார் மட்டுமே. மலர்களாகிய நீங்கள் தான் இதை மாலையாக்க முடியும். எனவே சனவரி 29 காலை 9 மணியளவில் நிகழ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை உரிமையோடும், உண்மை உணர்வோடும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
இப்படிக்கு,
சிவப்ரியன் செம்பியன்
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு