ஓரங்கட்டப்படுகிறாரா விஜய்? புஸ்ஸி ஆனந்தின் வசம் செல்கிறதா தவெக? தவெகவின் புதிய தேர்தல் வியூக வகுப்பாளர் யார்?
Politics

ஓரங்கட்டப்படுகிறாரா விஜய்? புஸ்ஸி ஆனந்தின் வசம் செல்கிறதா தவெக? தவெகவின் புதிய தேர்தல் வியூக வகுப்பாளர் யார்?

Jan 11, 2025

விஜய்-புஸ்ஸி ஆனந்த் மோதல்: தமிழக வெற்றி கழகத்தில் தந்திரமான போட்டி
புஸ்ஸி ஆனந்தின் செல்வாக்கு, விஜய்யின் எதிர்ப்பு – கட்சியின் எதிர்காலம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோகியசாமி மற்றும் தவெகவின் முக்கிய‌ப் பிரமுகர் ஒருவரும் அலைபேசியில் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அந்த ஆடியோவில், ஜான் ஆரோகியசாமி தமிழக வெற்றி கழகத்தால் 2026 தேர்தலில் 2% வாக்குகளை கூட பெற முடியாது என்று விமர்சிக்கிறார். அவர் கட்சியின் அடிப்படையான ரசிகர் அமைப்பை முழுமையாக பயன்படுத்த தவறியதற்கு கடும் அதிருப்தி தெரிவிக்கிறார் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் விஜய்யின் முதுகுக்குப்பினே தூண் போல செயல்படுவதுடன், தனது பெயரை முக்கியமான இட்ங்களில் முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்.

இந்த ஆடியோவில் ஜான் ஆரோகியசாமி, “நாளை பாஜக அல்லது திமுக போன்ற கட்சிகள் விஜயை கைப்பற்றினால், கட்சியின் கதை முடிந்து போகும். இதை புஸ்ஸி ஆனந்துக்கு நேரடியாகச் சொல்லுகிறேன், விஜய்யிடம் சொல்லி பயனில்லை. அவர் புரிந்து கொள்வதில்லை, மேலும் குரல் கொடுக்க மாட்டார்,” என்றும் கூறுகிறார்.

ஜான் ஆரோகியசாமி விஜய்யின் ரசிகர் மன்றங்களை அடிப்படையாக கொண்ட கட்சியின் அமைப்பை புஸ்ஸி ஆனந்தின் சொத்து என்கிறார். ஆனால் விஜய்யின் முகமே கட்சியின் முகமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின்‌ சார்பாக வெளியிடப்படும் போஸ்டர்களில் விஜய்யை விட புஸ்ஸி ஆனந்தின் முகமே பெரியதாக காட்டப்படுவதால், இது மிகப் பெரிய தவறு,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் அவர், ” தவெகாவில் தலைமை தாங்கும் இடத்தில் புஸ்ஸி ஆனந்த் தான்‌‌ இருக்கிறார்; விஜய் பின்னால் நிற்கிறார்,” என்று கூறி‌ முடிக்கிறார்.

இதை மெய்யாக்கும் விதமாக, 10.01.2025 அன்று நடந்த தவெகவின்‌ அறிவிக்கப்படாத மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை தன்னிச்சையாக ஏற்பாடு செய்து, நடத்தி‌ முடித்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் புஸ்ஸி ஆனந்தின் தீவிர ஆதரவாளர்கள். இவர்களே அடுத்த ஓரிரு வாரங்களில் தவெகவின் மாவட்டச் செயலாளர்களாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள். விஜய்யின் தீவிர ஆதரவாளர்கள் கட்சியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படி தன்னுடைய தந்திர செயல்பாடுகள் மூலமாக கட்சியில் தனக்கு‌ விஜயை‌ விட அதிக செல்வாக்கு இருப்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் புஸ்ஸி ஆனந்த்.

மேலும் கட்சியையும், தன்னையும் குறித்து அவதூறு பேசிய ஜான் ஆரோக்கியசாமியை வெளியேற்றிவிட்டு, சமிபத்தில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனாவை தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்க கட்சியின் முக்கிய‌‌ப் புள்ளிகளை வைத்து புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு அழுத்தம்‌ கொடுப்பதாகவும் தவெக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இதை பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் தன்னுடைய 69வது படப்பிடிப்பிற்காக சென்றிருக்கிறார். தமிழ் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் இன்றைய தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதில்லை. காரணம் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் என்பது அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் அளவிற்கு முக்கியமானது. ஆனால் கட்சியின் தலைவர் அக்கட்சியின் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையே புறக்கணித்திருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் விஜய்யின் மீது ஒரு சிறிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் தவெகவில் புஸ்ஸி ஆனந்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

ஒரு கட்சி தொடங்கி 10 வருடங்கள் அல்லது 15 வருடங்களில் அக்கட்சியில் பிளவுகளையும், பெரும் கோஷ்டி மோதல்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று, கட்சி தொடங்கப்பட்ட 11 மாதங்களில் கட்சியை அதன் நிறுவனத் தலைவரிடம் இருந்து கட்சியின் பொதுச் செயலாளர் அபகரிக்க‌‌ முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் ஓங்கப்போவது புஸ்ஸி ஆனந்தின் கைகளா? அல்லது விஜய்யின் கைகளா? இந்த பிளவுகள், கோஷ்டி மோதல்கள் எல்லாவற்றையும் தாண்டி தவெக எழுச்சி‌ பெருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *