மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு; காரணம் என்ன?
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் (நவம்பர் 20) ஒரே கட்டமாக அமைதியாக நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் மாநில அளவில் 65.1% வாக்குகள் பதிவாகியுள்ளன, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு இது. குறிப்பாக, நக்சலைட் ஆதிக்கம் அதிகம் கொண்ட கட்சிரோலி மாவட்டத்தில் 73.7% வாக்குகள் பதிவாக, கோலாப்பூரில் அதிகபட்சமாக 76.3% வாக்குகள் பதிவாகியது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த பின்னர் நடைபெறும் முதல் தேர்தலாக இதற்கு கட்சி தொண்டர்களின் அதிக செயற்பாடுகள் முக்கிய காரணமாக இருந்தன.
இந்த முறை தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து குடியிருப்பு பகுதிகளில் அமைத்தது. இதனால் குடியிருப்பு கட்டிடங்களில் 95% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், மாநகராட்சிகள் மற்றும் பள்ளிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் சராசரியாக 50% மட்டுமே வாக்குகள் பதிவாகின. மும்பையில் சராசரியாக 54.7% வாக்குகள் பதிவாக, கடந்த முறை 50.5% ஆக இருந்ததை விட உயர்வடைந்தது. ஆனால் தாராவி, பாந்த்ரா மேற்கு போன்ற பகுதிகளில் வாக்கு சதவீதம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.
தேர்தலோடு, நாண்டெட் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடந்தது. வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டு, இரவு 9.30 வரை வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தலுக்குப் பின்பு வெளியான 10 கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பா.ஜ.க தலைமையிலான மஹாயுதியின் வெற்றியை முன்னறிவித்துள்ளன, 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
