மேகதாது அணை எதிர்ப்பு: தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் பந்த் போராட்டம்; பேருந்து போக்குவரத்து பாதிப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் எல்லை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னட ஒக்கூடா கூட்டமைப்பின் தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில், தமிழ்நாடு–கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு (Bandh) போராட்டம் நடைபெற்றது. மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்தும், திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தின் காரணமாக, தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கி இயக்கப்பட்ட பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. குறிப்பாக, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஓசூர் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவசர பயணிகள் மாற்று போக்குவரத்து வசதிகளை நாடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து எப்போது முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
