“காங்கிரஸ் ஒரு குடும்ப நிறுவனம்!” மோடியின் அசுர வளர்ச்சிக்குக் காந்திகளே காரணம்!
Opinion

“காங்கிரஸ் ஒரு குடும்ப நிறுவனம்!” மோடியின் அசுர வளர்ச்சிக்குக் காந்திகளே காரணம்!

Jun 1, 2026

இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ராமச்சந்திர குகா (Ramachandra Guha), தற்போதைய இந்திய அரசியல் சூழல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 2024 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களைப் பிடித்ததும், டெல்லியில் உள்ள சில ஊடகவியலாளர்கள் ராகுல் காந்தியை ‘அடுத்த பிரதமர்’ என்று அவசரமாகக் கொண்டாடத் தொடங்கினர்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்தப் போலி மகிழ்ச்சி முற்றிலும் காணாமல் போய்விட்டது என்று குகா தனது புதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராகுல் காந்தியின் பொறுப்பற்ற 22 ஆண்டுகால அரசியல்!

ராகுல் காந்தி ஒரு நல்ல மனிதராக இருக்கலாம், ஆனால் அவரிடம் ஒரு நாட்டின் பிரதமருக்குரிய எந்தவொரு தகுதியும் இல்லை என குகா சாடியுள்ளார்:

  • நிர்வாக அனுபவம் இல்லாமை: ராகுல் காந்தி தனது 22 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஒரு சாதாரண அரசு வேலையிலோ அல்லது அமைச்சரவைப் பொறுப்பிலோ இருந்ததில்லை.
  • தொடர்ச்சியற்ற போராட்டங்கள்: தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள் குறித்துப் பேசிக் திடீரென ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார். ஆனால், அதன் பிறகு உடனே ஐரோப்பாவிற்கோ அல்லது லத்தீன் அமெரிக்காவிற்கோ சுற்றுலா சென்றுவிடுவார்.
  • போலி உத்திகள்: மீனவர்களுடன் குளத்தில் குதிப்பது அல்லது சமையலறையில் சமையல் செய்வது போன்ற நாடக உத்திகள் (Gestural Gimmickry) ஒருபோதும் வாக்குகளைப் பெற்றுத் தராது.

பாதியாகக் குறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை!

‘தி பிரின்ட்’ (The Print) செய்தி நிறுவனத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ராகுல் காந்தி 2008-ஆம் ஆண்டு முறைப்படி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அதன்பின்னர், இந்தியா முழுவதும் இருந்த காங்கிரஸ் கட்சியின் மொத்த எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 1,204-லிருந்து வெறும் 676-ஆக அதாவது பாதியாகக் குறைந்துள்ளது.

ராகுல் காந்தியால் இந்தத் தொடர் சரிவைத் தடுக்க முடியவில்லை. இதனால் குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் தனது பிடியை முற்றிலும் இழந்து, அங்குப் பாஜக நிரந்தர ஆளுங்கட்சியாக மாறியுள்ளது.

வாரிசு அரசியலுக்கு விழுந்த பலத்த அடி!

காங்கிரஸ் கட்சியில் ராகுலுக்குப் பதில் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தப் பார்க்கும் மூவ்களையும் குகா விமர்சித்துள்ளார். பிரியங்கா காந்தி 2022 உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கிய போது, காங்கிரஸ் கட்சி அங்குப் பெற்ற வாக்குச் சதவீதம் வெறும் 2.27% மட்டுமே ஆகும்.

மேலும், அண்மையில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வாரிசு அரசியலுக்கு (Dynastic Entitlement) எதிரான மக்களின் தீர்ப்பாகவே அமைந்துள்ளன:

  • அசாம்: தருண் கோகோயின் மகனை முன்னிறுத்தியதால் காங்கிரஸ் தோற்றது.
  • மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜி தனது மருமகன் அபிஷேக்கை வளர்த்ததால் டிஎம்சி சரிவைச் சந்தித்தது.
  • தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை உயர்த்தியதால், அது தவெக தலைவர் விஜய்யின் வளர்ச்சிக்கு மறைமுகமாக வழிவகுத்தது.

ஹங்கேரி நாட்டின் ‘பீட்டர் மகியர்’ பாணி இந்தியாவுக்குத் தேவை!

பாஜக அரசு நீட் தேர்வு முறைகேடு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதாரக் குளறுபடிகளால் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) போன்ற அரசியல் நையாண்டி மீம்கள் இளைஞர்கள் மத்தியில் பாஜகவின் பொய் பிரச்சாரங்களை உடைத்து வருகின்றன.

இருப்பினும், இந்த அதிருப்தியை ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாற்றக் காந்தி குடும்பத்தால் முடியாது. ஹங்கேரி நாட்டில் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த விக்டர் அர்பானை வீழ்த்த, அங்குப் ‘பீட்டர் மகியர்’ (Péter Magyar) என்ற புதிய முகம் தோன்றினார். அவர் வாரிசு பின்னணி இன்றி கிராமம் கிராமமாகச் சென்று மக்களைத் திரட்டினார். அதுபோன்ற ஒரு கடின உழைப்பும், புதிய முகமும் தான் இந்தியாவிற்கும் தேவை என்று ராமச்சந்திர குகா தனது கட்டுரையை முடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *