கேரளாவில் ஜூன் 15 முதல் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்! — முதல் கையெழுத்திட்டார் புதிய முதல்வர் வி.டி.சதீசன்!
திருவனந்தபுரம் | மே 18, 2026
கேரள மாநிலத்தின் புதிய முதலமைச்சராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீசன் இன்று (மே 18) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 20 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்தவுடன் தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் வி.டி.சதீசன், தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். அதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகப் பல்வேறு அதிரடி கோப்புகளில் அவர் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
1. பெண்களுக்குப் பேருந்துகளில் இலவசப் பயணம் (ஜூன் 15 முதல்):
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் வி.டி.சதீசன், தங்களின் ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் இரண்டு முக்கிய திட்டங்களை உடனடியாக அமல்படுத்துவதாக அறிவித்தார்.
“கேரள அரசுப் பேருந்துகளில் (KSRTC) பெண்கள் அனைவரும் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் இலவசமாகப் பயணம் செய்யலாம். இதற்கான கோப்பில் முதல் கையெழுத்திடப்பட்டுள்ளது.”
தமிழகம் மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து தற்போது கேரளாவிலும் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2. இந்தியாவில் முதன்முறை: முதியவர்களுக்கெனத் தனி அமைச்சகம்!
முதியவர்களின் நலனைக் காக்க இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் ஒரு புதிய புரட்சிகரமான திட்டத்தை வி.டி.சதீசன் அரசு அறிவித்துள்ளது.
- வயதானவர்களுக்கான தனித் துறை: “வயதானவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஒரு நாகரிக சமூகத்தின் அளவுகோல். எனவே, இந்தியாவில் முதன்முறையாக முதியவர்களின் நலன்களை மேம்படுத்தத் ‘தனி அமைச்சகம் / துறை’ உருவாக்கப்படவுள்ளது,” என்று முதல்வர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
3. ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அதிரடி ஊதிய உயர்வு:
கடந்த இடதுசாரி (LDF) ஆட்சிக்காலத்தில் ஊதிய உயர்வு கோரி நீண்ட நாட்களாகப் போராடி வந்த ஒப்பந்த மற்றும் சமூகப் பணியாளர்களின் கோரிக்கையை முதன் நாளிலேயே புதிய அரசு நிறைவேற்றியுள்ளது.
- ஆஷா பணியாளர்கள் (ASHA Workers): இவர்களுக்கான மாத ஊதியத்தில் ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளது.
- அங்கன்வாடி பணியாளர்கள்: மாத ஊதியம் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது.
- பள்ளிகளில் பணிபுரியும் சமையல் பணியாளர்கள், ப்ரீ-ஸ்கூல் (Pre-school) ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்களுக்கு மாத ஊதியம் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது.
மே 21-ல் கூடுகிறது சிறப்புச் சட்டமன்றம்:
புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்தலுக்காகக் கேரள சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே 21-ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கி புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். தொடர்ந்து மே 22-ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் இந்த முதல் நாள் ‘அதிரடி ஆட்டத்தால்’ கேரள மக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
