காமேனிக்குப் பிறகு யார்? ஈரானின் அடுத்த உச்ச தலைவர் நாற்காலிக்கு நடக்கும் ‘நால்வர்’ போட்டி!
டெஹ்ரான்: ஈரானின் உச்ச அதிகார மையமாகத் திகழ்ந்த அயத்துல்லா அலி காமேனி, இஸ்ரேல் – அமெரிக்கக் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். வாரிசு யார் என்று அவர் பகிரங்கமாக அறிவிக்காத நிலையில், ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் அந்த 4 முக்கிய நபர்கள் யார்?
1. மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) – வாரிசு அரசியல்?
காமேனியின் இரண்டாவது மகனான 56 வயது மோஜ்தபா, நீண்டகாலமாகவே நிழல் உலக அதிகார மையமாகச் செயல்பட்டு வருபவர்.
- பலம்: தனது தந்தையிடம் அரசியல் பயின்றவர். ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
- சவால்: மதகுருமார்கள் ஆதிக்கத்தில் வாரிசு அரசியலை ஈரான் மக்கள் ஏற்பார்களா என்பது பெரிய கேள்விக்குறி.
2. மர்யம் ரஜாவி (Maryam Rajavi) – ஜனநாயகக் குரல்
ஈரானின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான இவர், “மதகுரு ஆட்சியைத் தூக்கி எறியுங்கள்; ஜனநாயகக் குடியரசை ஏற்படுத்துங்கள்” எனப் போர் முழக்கமிட்டுள்ளார். பெண்களின் உரிமைக்காகவும், மதச்சார்பற்ற ஆட்சிக்காகவும் இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
3. ரெசா பஹ்லவி (Reza Pahlavi) – முன்னாள் இளவரசர்
ஈரானின் கடைசி மன்னரின் மகனான இவர், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். “இஸ்லாமிய ஆட்சி சிதைந்தால், மாற்று ஜனநாயக ஆட்சிக்கு என்னிடம் திட்டங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலையீட்டை மனிதாபிமான நடவடிக்கை என ஆதரிக்கும் இவருக்கு, ஈரானின் ஒரு தரப்பு இளைஞர்களிடையே ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது.
4. ஹசன் கொமேனி (Hassan Khomeini) – புரட்சியின் வாரிசு
ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்கு வித்திட்ட ருஹோல்லா கொமேனியின் பேரன் இவர். 53 வயதான இவர், ஒரு மிதவாத மதகுருவாகப் பார்க்கப்படுகிறார். காமேனி குடும்பத்திற்கு மாற்றாக, புரட்சியின் உண்மையான வாரிசு எனத் தன்னை முன்னிறுத்த வாய்ப்புள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்பின் ‘மர்ம’ பதிவு!
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள செய்தி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. “ஈரானை வழிநடத்தப் போகும் அந்த நல்ல தலைவர் யார் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது சொல்ல மாட்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இது அமெரிக்கா ஏற்கனவே ஒருவரை அடையாளம் கண்டு வைத்துள்ளதைக் காட்டுகிறது.
