“வளர்ச்சி என்றால் கட்டடங்களும் கார்களும் அல்ல; மனிதர்கள் மகிழ்ச்சியோடு வாழும் நிலைதான்” – என்ற முஹிகா (#José_Mujica) மறைந்தார் :

நாம் அனைவரும் ஏங்கும், விரும்பும் அரசியலின் ஒரு அழகான முகவரியாக, சரியான நபரிடம் இடதுசாரி தத்துவம் இருந்தால் அது இந்த உலகை எப்படி அழகாக மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டு உருகுவையின் முன்னாள் குடியரசுத் தலைவர் #ஜோஸ்_முஹிகா. அவர் வாழ்க்கை முழுவதும் எளிமைக்கும், நேர்மைக்கும், மக்கள் நலனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
ஜோஸ் முஹிகா ஒரு முன்னாள் புரட்சியாளர். தனது அரசியல் வாழ்க்கையை தீவிர இடதுசாரி இயக்கங்களோடு தொடங்கியவர். பின்னாளில் ஜனநாயக வழியில் நாட்டின் தலைவராக உயர்ந்தார். 2010 முதல் 2015 வரை உருகுவை நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். ஆனால் ஜனாதிபதி இல்லத்தில் வாழவில்லை – தன் சிறிய பண்ணை வீட்டில் தன் மனைவியோடு மிக எளிமையாகவே வாழ்ந்தார்.
மாதம் ரூ. 10 லட்சம் சம்பளம் பெற்றவர் – ஆனால் அதில் 90% வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு, சமூக நலத்திற்காக தானமாக கொடுத்தவர்.
அவருடைய கார் தான் அவரது எளிமையின் அடையாளம் – ஒரு பழைய 1987 மாடல் போல்ஸ்வாகன் பீட்டில்! மிஸ்டர் பீன் படங்களில் இந்த காரை பார்த்து இருக்கலாம்.
தனிப்பட்ட அவரின் இந்த புகழ்ச்சிகளை விட, அவர் அரசியல் ரீதியாக மாற்றம் கொண்டு வந்தவை இலத்தின அமெரிக்க நாடுகளில் கற்பனையும் செய்ய முடியாதவை. உதாரணமாக, ஓரினசேர்க்கை நபர்களின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்தல் ( கத்தோலிக்க திருச்சபையின் கோரப்பிடியில் இருக்கும் ஒரு நாட்டில் இவை வரலாற்று ரீதியாக புரட்சியாகும் ), அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம், பெரு முதலாளிகளின் சொத்துக்களை நாட்டுடைமையாக்கள் என்று சமுதாயத்தை சோசியலிச பாணியில் நகரத்தினார். சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து பல்வேறு அழுத்தங்களும் ஆபத்துகளும் நிறைந்து இருந்தாலும் தன் நாட்டின் சாமானிய மக்களிடமிருந்து அவர் பெற்ற அன்பும் பாதுகாப்பும் அவரை அந்த தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து வைத்திருந்தது.
உண்மையாகவே மக்களுக்காக உழைக்கும் தலைவர்களுக்கு அந்த மக்கள் தங்கள் உயிரையும் கொடுப்பர் என்பதற்கு இந்த மாபெரும் தலைவரும் ஒரு எடுத்துக்காட்டு.
அவரின் வாழ்கை இன்று உலகம் முழுவதும் ஒரு உண்மையான எதிர்மாற்றத்தின் சின்னமாகவும், இளைய தலைமுறைக்கான உந்துதலாகவும் இருக்கிறது.
ஜோஸ் முஹிகா – அரசியல் என்பது பணமும் பதவியும் அல்ல; மக்கள் நலனுக்கான ஒரு தியாகப் பயணம் என்பதற்கான வாழ்ந்து காட்டிய எடுத்துக்காட்டு.
அவரின் மறைவு என்பது, புதிய உலகத்தை உருவாக்க விரும்பும் அத்தனை நபர்களுக்கும் பெரு இழப்பாகும் !
நெய்வேலி அசோக்,
பொது செயலாளர்
தோழர் களம்