மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்… அடுத்த முதல்வர் யார்..?
Politics

மகாராஷ்டிரா: பதவியை ராஜினாமா செய்த முதல்வர், துணை முதல்வர்கள்… அடுத்த முதல்வர் யார்..?

Nov 26, 2024

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுள்காலம் இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணைமுதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று காலையில் சந்தித்து பேசினர். முதலில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் ஆகியோர் ராஜ்பவனுக்கு புறப்பட்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டு ராஜ்பவன் சென்றார். அவர்கள் மூவரும் சேர்ந்து ராஜினாமா கடிதத்தை சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தனர். அக்கடிதத்தை பெற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் மாற்று ஏற்பாடு செய்யும் வரை தொடர்ந்து முதல்வராக நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மும்பையில் உள்ள முதல்வரின் அரசு இல்லமான வர்ஷாவில் சிவசேனா தொண்டர்கள் கூடி வருகின்றனர். இதையடுத்து முதல்வர் பதவியை தனக்கு கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி தனது வீட்டு முன்பு கூடவேண்டாம் என்று ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் சோசியல் மீடியா மூலம் தனது கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூடி தங்களது சட்டமன்றத் தலைவரை தேர்வு செய்துவிட்டனர். ஆனால் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூடி இன்னும் தங்களது சட்டமன்றத் தலைவரை தேர்வு செய்யவில்லை. இவ்விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. விரைவில் ஏக்நாத் ஷிண்டேயும், தேவேந்திர பட்னாவிஸும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இது குறித்து பேசி தீர்வு காண இருக்கிறார்கள். பீகார் மாடலை பின்பற்றி ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் என்ற சிவசேனாவின் வாதத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ராவ் சாஹேப் தன்வே நிராகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *