
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: தேர்தல் சவால்கள், நலத்திட்டங்கள், மற்றும் வளர்ச்சி இலக்குகள்!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 2025 ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், கழகப் பணிகள், அரசின் திட்டங்கள், வரவிருக்கும் தேர்தல் சவால்கள் மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார்.
உடன்பிறப்புகளுடன் நேரடி உரையாடல் – மனநிறைவு தரும் கழகப்பணி: “உடன்பிறப்பே வா” நிகழ்ச்சி மூலம் கழக நிர்வாகிகளைச் சந்தித்து நேரடியாகப் பேசிட ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆவதாகவும், ஆனாலும் தனக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். கழக உடன்பிறப்புகளுடன் உரையாடும்போதுதான் தான் உற்சாகம் அடைவதாகவும், கட்சி சார்ந்து மட்டுமின்றி உடன்பிறப்புகளின் தொழில், குடும்பம் பற்றியெல்லாம் பேசித் தெரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார். அரசுப் பணிகள் ஆயிரம் செய்தாலும் கழகப்பணி என்று வரும்போதுதான் தாய்வீடு திரும்பிய மனநிறைவு ஏற்படுவதாக அவர் நெகிழ்ந்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் மற்றும் மக்கள் குறைகள் தீர்க்கும் திட்டங்கள்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதிப் பிரச்சனைகளைக் களையவும், மக்கள் குறைகளைத் தீர்க்கும் வகையிலும் மாநிலம் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 8 மண்டலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’, மருத்துவ உதவிகள் கிடைத்திட ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்களைக் கொடுக்கும் ‘தாயுமானவர் திட்டம்’ என மகத்தான மூன்று அரசுத் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இவை மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். நாள்தோறும் இத்திட்டங்களின் செயல்பாடுகளைத் தானே முன்நின்று கண்காணித்து வருவதாகவும் கூறினார். இந்த மூன்று திட்டங்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே கழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது, நமக்கான ஆதரவு மனநிலை தான் மக்களிடம் பொதுவாக இருந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரமும், வாக்காளர் பட்டியல் சவால்களும்: கடந்த மதுரை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டு, ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கத் தொடங்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரமும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களின் இந்த ஆதரவைத் தொடர்ந்து அதிகரிக்க, நாள்தோறும் கழக நிர்வாகிகள் மக்களைச் சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
BLA 2 மற்றும் BDA நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், அதேபோல BLC (Booth Level Committee) அமைத்து உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும், 100 வாக்காளர்களுக்கு ஒரு BLC உறுப்பினர் என்ற விகிதத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஒன்றிய பாஜக அரசு தேர்தல் ஆணையத்தின் மூலம் SIR (Special Intensive Revision) என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த சட்டம் மூலம் பீகாரில் என்னென்ன அடடூழியங்களை மேற்கொண்டு வருகிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், ஆகவே கழகத்தின் பாக முகவர்கள் அமைப்பு மிக வலுவாக இருப்பது கட்டாயம் எனவும், இதில் தனி கவனம் செலுத்தி BLCகளை நியமிக்குமாறும், இப்பணிகளைத் தானே நேரடியாகக் கண்காணிப்பேன் எனவும் எச்சரித்தார்.
கழக முப்பெரும் விழா மற்றும் உட்கட்சிப் பணிகள்: வருகின்ற கழகத்தின் முப்பெரும் விழாவிற்கு முன்பாக அனைத்துக் கழக மாவட்டங்களிலும் கிளைக் கழகக் கூட்டங்களை நடத்தி, மினிட் புத்தகத்தில் கையெழுத்து பெற்றுத் தலைமைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இக்கூட்டங்களை மிக எளிமையான முறையில் நடத்தினால் போதுமானது என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள்: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள முதலீட்டாளர்களுடன் பேசியதன் விளைவாகத் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் கொண்டுவரப்பட்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தங்களது நிறுவனங்களைத் தொடங்கி உள்ளதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். அதன் காரணமாக சுமார் 30 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெருகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
இது வெறும் வாய் வார்த்தைக்காகச் சொல்லவில்லை என்பதற்கான சாட்சிதான் சமீபத்தில் வெளிவந்துள்ள இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ற செய்தி என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். ஒன்றிய அரசு வெளியிட்ட தகவலின்படி இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது அடைந்த இரட்டை இலக்க வளர்ச்சி என்ற இலக்கினை தற்போது 15 ஆண்டுகள் கழித்து நமது திராவிட மாடல் அரசு எட்டி பிடித்துள்ளது என்றும், இது உள்ளபடியே மனமகிழ்வை தருவதாகவும் கூறினார்.
வரவிருக்கும் வெளிநாட்டுப் பயணம் மற்றும் எதிர்கால இலக்கு: எப்படி இதற்கு முன்பு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டேனோ, அதே போல வருகின்ற செப்டம்பர் மாதமும் வெளிநாடு செல்ல உள்ளேன் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்த முதலமைச்சர், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளதாக அறிவித்தார். வரும் நாட்களில் நமது கழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன் என்றும், அதற்கு அனைவரது ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
ஓய்வற்ற களப்பணிக்கு அழைப்பு: “ஏன் ஓய்வெடுப்பதில்லை என்று பலரும் கேட்கிறீர்கள். நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை” என்று கூறி, தொடர்ந்து களப்பணியாற்றும்படி நிர்வாகிகளை உசுப்பேற்றினார். “நீங்கள் ஆற்றும் களப்பணியே நமது இலக்கினை அடையும் முதல் படி. 2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்கக் களம் தயாராகிவிட்டது, முழு வீச்சுடன் களப்பணியாற்றிடுவோம்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அரசியல் செய்திகள்