
கூலி: ‘தெலுங்கு சினிமா கிங்’ டு ரஜினி வில்லன் – ‘ரட்சகன்’ நாகார்ஜுனா சில குறிப்புகள்!
நடிகர் நாகார்ஜுனா தனது கிட்டதட்ட 40 வருட சினிமா பயணத்தில் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் ‘கூலி’ படத்தில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்தால் ‘நாற்பது வருஷங்களுக்கும் மேலா ஒருத்தர் அதே இளமையோட இருப்பது ஆச்சர்யம்தான்’ என்று பாராட்டப்பட்ட நாகார்ஜுனாவின் சினிமா பயணம் குறித்துப் பார்ப்போம்.
ரஜினியுடன் வில்லன் கதாபாத்திரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாக இருக்கும் ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது நாகார்ஜுனா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தான் சம்மதிக்கவில்லை என்றும், லோகேஷ் கனகராஜ் 7, 8 முறை சந்தித்துத் தன்னுடன் பேசியதாகவும், ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும் பிறகு கதாபாத்திரம் பிடித்திருந்தால் ஓகே சொல்லிவிட்டதாகவும் ‘கூலி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நாகார்ஜுனா தெரிவித்திருந்தார்.
40 வருட சினிமா பயணம்: தெலுங்கு திரைப்பட ரசிகர்களால் ‘கிங்’ என்று அழைக்கப்படும் நாகார்ஜுனா, 1959 ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் அக்கினேனி நாகார்ஜுனா ராவ். புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் மகனான நாகார்ஜுனா சிறுவயதில் இருந்தே திரைப்பட சூழலில் வளர்ந்ததால், சினிமா மீது இயல்பாகவே ஈடுபாடு இருந்தது.
1986-ல் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நாகார்ஜுனா. அதற்கு முன்பு, 1967-ல் தந்தையின் படமான ‘சுதிகுந்த்லு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
தொடர்ந்து அவரது நடிப்பில் ‘ஆஹரி போராட்டம்’, ‘ஜானகி ராமுடு’, ‘கீதாஞ்சலி’ போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்தாலும், அவருக்கென்று தனிப்பட்ட ரசிகர் வட்டத்தைப் பெருகச் செய்த படம் ‘சிவா’. இந்தத் திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருந்தார். அந்தப் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.
தமிழில் ‘உதயம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் ஹிட்டானது. தவிர தமிழில் மணிரத்னத்தின் ‘கீதாஞ்சலி’ படம் மூலமாக அறிமுகமான நாகார்ஜுனா அந்தப் படத்திற்காகவும் தேசிய விருதைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
அதன்பிறகு தமிழில் ‘ரட்சகன்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். 2000 ஆம் ஆண்டுகளில் வெளியான ‘சந்தோஷம்’, ‘மாஸ்’, ‘டான்’, ‘கிங்’ போன்ற படங்கள் இவரை சூப்பர் ஸ்டார் அளவுக்கு தெலுங்கு சினிமாவில் உயர்த்தியது.
தெலுங்கில் எண்ணற்ற படங்களில் நடித்த நாகார்ஜுனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தியுடன் இணைந்து தமிழில் ‘தோழா’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வந்த நாகார்ஜுனா இதுவரை இரண்டு தேசிய விருதுகளையும், ஆந்திரப் பிரதேச அரசின் 9 நந்தி விருதுகளையும், 3 ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றிருக்கிறார்.
படங்கள் தவிர்த்து பிக்பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாவில் பயணிக்கும் நாகார்ஜுனா லவ், ஆக்ஷன் எனக் கிட்டதட்ட 90 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார்.
தனது சினிமா பயணத்தில் புதுப்புது கதாபாத்திரங்களை எடுத்து நடிக்கும் நாகார்ஜுனா இந்த முறை வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரம் அவருக்குக் கைகொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.