
குஜராத்: கம்பீரா பாலம் இடிந்து மகி ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் – 9 பேர் உயிரிழப்பு!
மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் முக்கியமான கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மஹிசாகர் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்தும் மீட்புப் பணிகளும்: வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள இந்த பாலம், இன்று காலை திடீரென ஒரு பெரிய ஸ்லாப் (slab) இடிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். விபத்து நடந்ததும் முதலமைச்சர் உயர்மட்டக் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல், மஹி ஆற்றில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் வரை விழுந்திருக்கலாம் என பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து வெளியான படங்களில், பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே ஒரு டிரக் தொங்கிக் கொண்டிருப்பதும், ஆற்றில் சில வாகனங்கள் விழுந்திருப்பதும் காணப்படுகிறது.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராமத் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், விபத்து நடந்த அரை மணி நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு வந்து, நான்கு கார்கள், ஒரு பைக், ஒரு ரிக்ஷா, லாரி, ஈகோ கார் மற்றும் சரக்கு ஏற்றும் மேக்ஸ் வாகனம் ஆற்றுக்குள் விழுந்திருந்ததை கண்டதாகக் கூறினர். சிலர், தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிக்கியதாகவும், ஒரு பெண் மட்டுமே உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்த் மாவட்ட ஆட்சியர் பிரவீன் கௌத்ரி பிபிசியிடம் பேசுகையில், விபத்து நடந்த வதோதரா பகுதியில் முழு அளவில் மீட்புப் பணிகள் நடைபெறுவதாகவும், போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். வதோதரா மாவட்ட எல்லைக்குள்ளும் இந்த பாலம் வருவதால், ஆனந்த் மற்றும் சௌராஷ்டிராவிலிருந்து வதோதரா செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
பழைய பாலம் குறித்த கவலைகள்: சம்பவ இடத்திற்குச் சென்ற உள்ளூர் மக்கள் மற்றும் கிராமத் தலைவர்கள், பாலம் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் இருந்ததாகவும், அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். முஜ்பூர் கிராமத் தலைவர் அபேசிங் பர்மார், பாலத்தில் பல இடங்களில் குழிகள் இருந்ததாகவும், கம்பிகள் வெளியே தெரிந்ததாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
முதலமைச்சரின் இரங்கல் மற்றும் நிவாரண அறிவிப்பு: குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “கம்பீரா பாலத்தின் ஒருபகுதி உடைந்து விழுந்தது வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்,” என்று அவர் அறிவித்தார்.
பாலத்தின் நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள்: மாநில அமைச்சர் ரிஷிகேஷ் படேல் கூறுகையில், 1985-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலம் அவ்வப்போது பழுது பார்க்கப்பட்டு வந்ததாகவும், இந்த விபத்து துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்தார். ரூ. 212 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஏற்கனவே ஒப்புதல் அளித்ததாகவும், அதற்கான ஒப்பந்தம் கோருவது, மதிப்பீடு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் முதன்மை பொறியாளர் சி.பி. படேல், இந்த பாபலம் 1985 இல் திறக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார். விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றும், அனைத்துப் பாலங்களிலும் பருவமழைக்கு முன்னரும் பின்னரும் ஆய்வுகள் நடத்தப்படுவது வழக்கம் என்றும் அவர் கூறினார். சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் செயலாளர் பிஆர் படேலியா, நிபுணர்கள் குழுவினர் நிகழ்விடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: இந்த விபத்து தொடர்பாக குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா, “இம்மாதிரியான விபத்துகள் மீண்டும் மீண்டும் நிகழ்வது ஏன்? இந்த பாலம் ஆபத்தான அளவில் இருந்திருந்தால், முன்பே அது சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது மூடப்பட்டிருக்க வேண்டும். அரசின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது,” என்று குற்றம்சாட்டினார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் இசுதன் காத்வி, இந்த பாலம் விபத்து மனித தவறால் நிகழ்ந்தது என்றும், “ஒரு டிரக் உட்பட 4 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளன. பொதுமக்கள் வரி செலுத்தும்போது அரசாங்கமும் பாஜகவும் ஒரு வலுவான உள்கட்டமைப்பை தருகின்றனவா என்பதுதான் கேள்வி,” என்றும் தெரிவித்தார். பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய அவர், பாலம் சேதமடைந்த நிலையில் இருந்திருந்தால், ஏன் அப்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.