மறக்கப்பட்ட நில உரிமை போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் !
Tamilnadu

மறக்கப்பட்ட நில உரிமை போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் !

Nov 12, 2025


இந்திய துணைக்கண்டத்தின் சமய, தத்துவ மரபு வைதீகம் அவைதீகம் எனும் இரு தளங்களில் நீண்டுகொண்டே வந்தது. அந்த அவைதீக மரபில் சாருவகர், மகாவீரர், புத்தர், திருவள்ளுவர், சித்தர்கள், அய்யா வைகுண்டர், வள்ளலார், நாராயண குரு, ஐயங்காளி போன்றோர் மாற்றுச் சிந்தனையைக் கொண்டவர்கள்.

இந்த வரிசையில் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ஒரு பெயர் — நில உரிமை போராளி அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர்.

1799 ஆம் ஆண்டு செங்கற்பட்டுக்கு அருகே உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய கல்வியாளர்.

மன்னர்கள் வன்னியர் குடிமக்களுக்கு வழங்கிய நிலங்களை பார்ப்பனர்கள் கைப்பற்றியதை எதிர்த்து, “நிலம், பட்டா மக்களின் உரிமை” என்ற கோஷத்துடன் போராடினார். வன்னியர் மக்களுக்காக மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் அவர் போராடினார். இதனால் அவர் அரசு ஆவணங்களில் “பாயக்காரிகள் ஏஜென்ட்” எனப் பதிவு செய்யப்பட்டார்.

இந்து மதத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து, பெரியாருக்கு முன்னரே அவைதீக, நாத்திக சிந்தனையுடன் எழுதியவர். 1872 இல் பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாகிய விவாதம், 1882 இல் இந்துமத ஆசார ஆபாச தசினி, 1883 இல் தத்துவ விவேசினி இதழ் ஆகியவை அவரது முக்கிய ஆக்கங்கள்.

பெரியார் 1930 ஆம் ஆண்டு குடியரசு இதழில், “அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் எழுதிய பாடல்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பாடின” என்று பாராட்டியுள்ளார்.

அவர் எழுதிய நூல்கள், நில உரிமையும் மதச் சுதந்திரமும் மக்களின் சுயமரியாதையும் இணைந்த முதல் தமிழ்ச் சிந்தனைகளாகும். அவைதீக மரபுக்கும் நவீனத்திற்கும் இடையில் பாலம் அமைத்த மறைக்கப்பட்ட முன்மாதிரி அவர்.

அவருடைய 226 ஆம் ஆண்டு நினைவு நாளில், அவருடைய போராட்டங்களை உழைப்பை பார்ப்பனரல்லாத (OBC + SC+ ST) அனைவரும் நினைவு கூறுவோம் !

நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *