கீழடி: “சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்” – அமர்நாத் ராமகிருஷ்ணா பேச்சு !
Tamilnadu

கீழடி: “சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்” – அமர்நாத் ராமகிருஷ்ணா பேச்சு !

Aug 11, 2025

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குறிப்பிட்ட தலைப்புகளில் உரையாற்றுவார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவில் இந்தியத் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா கலந்துகொண்டு பேசினார். அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் கீழடியில் 2014-15, 2015-16 என இரு கட்டங்களாக அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏ.எஸ்.ஐ) சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், தற்போது இந்த அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அதில் திருத்தம் மேற்கொள்ளுமாறு அமர்நாத் ராமகிருஷ்ணாவிடமே திருப்பி அனுப்பப்பட்டது. இது பெரும் சர்ச்சையையும், பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

புத்தகத் திருவிழாவில் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுகையில் சில முக்கியக் கருத்துக்களை முன்வைத்தார்:

ஆதாரங்களைச் சங்க இலக்கியத்தோடு ஒப்பிட வேண்டும்: “நம் தமிழ்நாட்டில் கீழடிக்கு முன்பே பல அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அதைப் பற்றிப் பலருக்கும் தெரிவதில்லை. நம் தமிழிலுள்ள பல சங்க இலக்கியங்கள் நம் வரலாற்றை எடுத்துரைக்கிறது. நமது தமிழ்நாட்டில் இதுவரை கிடைக்கப்பெற்ற தொல்லியல் ஆதாரங்களைச் சங்க இலக்கியங்களோடு ஒப்பிட வேண்டும். அவ்வாறு நாம் ஒப்பிடாமல் இருந்ததுதான் இப்போது நமக்கு பல சங்கடத்தை அளிக்கிறது.”

ஈரோட்டில் நடந்த கொடுமணல் அகழாய்வு: “ஈரோட்டில் உள்ள கொடுமணல் நம் வரலாற்றை எடுத்துரைக்கும் ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளாகக் கொடுமணலில் நடந்த அகழாய்வில் பல அரிய வரலாற்றுத் தகவல்கள் உலகிற்குத் தெரியவந்துள்ளன. உலகிற்கு ‘பெரில்’ எனக் கூறப்படும் பச்சை மரகதக் கற்களை ரோமானியத்திற்கு ‘முசிறி’ எனும் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.”

சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்: “உலகில் இதுவரை நாம் அறிந்துள்ள நாகரிகங்களில் சிந்து சமவெளி நாகரிகம் உலகின் மிக முக்கியமான நாகரிகம் என வரலாற்றில் பட்டியலிடப்பட்ட நாகரிகம் ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் 13 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நாகரிகம் ஆகும். 60,000 ஆண்டுகளாக நம் இந்திய நிலப்பரப்பில் வாழும் ஆதி மூதாதையர் தென்னிந்தியர்களின் (Ancient Ancestral South Indian – AASI) மரபணு கிடைத்த இடம் நம் தமிழ்நாடுதான்.”

“மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செய்த ஆய்வானது லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மரபணு ஆராய்ச்சிகளின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம் திராவிடப் பழங்குடிகள் இணைந்து உருவாக்கப்பட்டது என்ற கருத்து உறுதிப்படுகிறது,” என்று அமர்நாத் ராமகிருஷ்ணா தனது உரையில் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *